வாழ்வுக்கான அர்த்தம்

http://boardpreptampa.com/team_member/john-harden/ kovai gnaniவாழ்வுக்கான அர்த்தம் என்ற தேடல் வழியாகத்தான் மார்க்சியத்தை நான் ஆரத் தழுவிக் கொண்டேன். வரலாற்றில்தான் நான் வாழ்கிறேன். நெடுங்கால வரலாற்றின் வழியே மாறிவரும் சமூகச் சூழல்தான் என்னைப் படைக்கிறது, என் வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுகிறது. நான் தனியன் இல்லை. மாபெரும் வரலாற்று இயக்கத்தில் நான் ஒரு துளி. எனக்குள்ளும் வரலாறும் சமூகமும் இயங்குகின்றன. இந்த இயக்கத்தின் வழியே இயற்கையோடும், உயிர்களோடும், பிரபஞ்சத்தோடும் நான் உறவு கொண்டிருக்கிறேன். உடமையும் அதிகாரமும் என்னை ஆட்கொள்வதன் மூலம் என்னைச் சிறுமைப் படுத்துகின்றன, என்னை அடிமைப் படுத்துகின்றன.
இவற்றின் ஆதிக்கத்திற்கு என்னை நானே விட்டுத் தருவதன் மூலம் என் வாழ்வின் அழகையும் ஆற்றலையும் நான் அழித்துக் கொள்கிறேன். வரலாற்றின் வரையறைகளுக்குள் வாழ நேர்ந்த போதிலும் ஆதிகாலம் முதற்கொண்டு எனக்குள்ளும் தொடர்ந்து வருகிற பொதுமை/சமதர்மம் என்ற நீரோட்டத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள இயலாது. வரலாற்றின் நீரோட்டத்திற்குள்ளிருந்து காலம்தோறும் பொங்கி வழிகிற சமதர்மம் என்ற பேருணர்வில்தான் நான் தழைக்கிறேன். இந்த உணர்வுதான் நான் யார் என்ற புரிதலை எனக்குத் தருகிறது. இதன் மூலம்தான் வரலாற்று இயக்கத்தில், சமூக மாற்றத்திற்கான இயக்கத்தில் என்னைக் கண்டு கொள்ளவும், என் வாழ்வுக்கான அர்த்தத்தை உறுதிப் படுத்திக் கொள்ளவும் இயல்கிறது. மார்க்சியத்தின் வழியில் அல்லாமல் இத்தகைய அர்த்தத்தை, அழகை, ஆற்றலை பெறுவதற்கு வேறு வழியும் இல்லை. என்னுடைய வாழ்வுக்கான அர்த்தம் என்ற எனது தேடல் என்பது, எனக்கு மட்டுமே உரிய தேடல் என்று நண்பர்கள் கருத மாட்டார்கள் என நம்புகிறேன். தனி உடைமையும், அரசு அதிகாரமும் ஆதிக்கம் பெற்றுள்ள எந்த ஒரு சமூகச் சூழலும் மனிதரின் படைப்புத் திறன் முதலியவற்றை அழிக்கவே செய்கின்றன. ஆதிக்கத்திற்கு மக்கள் தங்களை இழந்து தவிக்கின்றனர். வறுமை, நோய் நொடிகள், தற்கொலைகள் முதலிய கொடுமைகளுக்கு மக்கள் உள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு கல்வியோ, வேலை வாய்ப்போ, தரப்படுவதில்லை. இவர்களின் சுதந்திரம் ஒடுக்கப் படுகிறது. இவர்களுக்கு ஆளுமை வளர்ச்சி இல்லை. இந்த மக்களின் வாழ்வுக்கான ஆதாரங்களாகிய நிலம், நீர், காடுகள் முதலிய இயற்கை வளங்களும் இவர்களிடமிருந்து பறிக்கப் படுகின்றன. ஆதிக்க சக்திகள் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் இவர்கள் மீது உச்ச அளவில் திணிப்பதன் மூலம் இவர்கள் வாழ்வின் ஆதாரங்களை மட்டும் அல்லாமல் அழகையும் அர்த்தங்களையும் அழிக்கிறார்கள்.
ஆதிக்கங்கள் அறவே இல்லாத சமூகச் சூழலில்தான் இவர்கள் மனித மாண்புகளுடன் வாழ முடியும். இந்த உண்மையை நமக்கு உணர்த்துவது மார்க்சியம்.
மார்க்சியத்தை அரசியல் என்று மட்டுமே நான் கருதவில்லை. மாறிவரும் உலகத்தையும், வாழ்வையும் தொடர்ந்து புரிந்து கொள்வதற்கான பேரறிவு என்று மார்க்சியத்தை நான் கொள்கிறேன். நெருக்கடிகள் மிகுந்த வரலாற்றுச் சூழலைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம் தவிர வேறு நெறி இல்லை என்பது மட்டும் அல்ல, நெருக்கடி மிகுந்த வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம்தான் திறவுகோல். இவ்வகையில் மார்க்சியம் ஒரு மெய்யியல். இம்முறையில் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்வது ஒரு கல்விமுறை. இந்த மெய்யியலும், கல்வி முறையும் என்றும் காலாவதியாக முடியாது.
கோவை ஞானி.
(‘மார்க்சியத்திற்கு அழிவில்லை’ நூலின் முன்னுரையில்)
நிகரன், இதழ் 12, பக்கம் 10

நான் மரணம் அடையும் நாளில்

maluking ni12அடிக்கடி ஒரு விஷயத்தை நான் யூகிக்கிறேன். மரணம் என்றழைக்கப் படுகின்ற வாழ்வின் இறுதியான பொது அம்சம் நிகழப் போகும் நாள் குறித்து நாம் அனைவரும் யதார்த்தமாக நினைக்கிறோம் என்று யூகிக்கிறேன்.
நாம் அனைவரும் அது குறித்து நினைக்கிறோம். என்னுடைய சொந்த மரணம் குறித்தும் என்னுடைய சொந்த இறுதிச் சடங்கு குறித்தும் நான் நினைக்கின்றேன். நான் சொல்ல விரும்புவது எதுவாக இருக்கும் என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். இன்று காலையில் அதைத்தான் உங்களிடம் கூறப் போகிறேன்.
நான் மரணம் அடையும் நாளில் உங்களில் யாராவது என்னருகே இருந்தால், எனக்கு நீண்ட இறுதிச் சடங்கு நடத்த வேண்டாம். அதை நான் விரும்பவில்லை.
இரங்கல் உரை நிகழ்த்த யாரையாவது நீங்கள் அழைத்தால் அவர் நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.
அவர் என்ன பேச வேண்டும் என்பது குறித்து நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அடிக்கடி எண்ணி வியக்கிறேன்.
நான் நோபல் பரிசு பெற்றவன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல.
நான் 300 அல்லது 400 இதர பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதைக் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல. நான் எந்தப் பள்ளியில் படித்தேன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.
பிறருக்குச் சேவை செய்வதற்காக மார்டின் லூதர் கிங் தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் குறிப்பிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
மார்டின் லூதர் கிங் சிலரிடம் அன்பு காட்ட முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் கூற வேண்டுமென்று விரும்புகிறேன்.
நான் சரியாக நடந்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து நடைபோட முயற்சித்தேன் என்று அந்த நாளில் நீங்கள் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பட்டினியால் வாடுவோருக்கு உணவளிக்க நான் முயற்சித்தேன் என்றும், ஆடையின்றி இருந்தோருக்கு ஆடையளிக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்றும் அந்த நாளில் நீங்கள் கூற இயலக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சிறையிலிருப்போரைப் போய்ச் சந்திக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்பதை அந்த நாளில் நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
மனித குலத்தை நேசிக்கவும், அதற்கு சேவை செய்யவும் நான் முயற்சித்தேன் என்று நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
ஆம் நான் முரசறைந்தவன் என்று நீங்கள் கூற விரும்பினால், நீதிக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். சமாதானத்திற்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். நேர்மைக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள்.
இதர அற்பமான விஷயங்கள் ஒரு பொருட்டல்ல.
விட்டுச் செல்வதற்காக என்னிடம் பணம் எதுவும் இருக்காது. விட்டுச் செல்வதற்காக அருமையான மற்றும் ஆடம்பரமானவை எதுவும் என்னிடம் இருக்காது. ஆனால் கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை நான் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.
நான் கூற விரும்புபவை அனைத்தும் இதுதான்.
மார்டின் லூதர் கிங்
(சவுத் விஷன் வெளியீடான ‘மார்டின் லூதர் கிங்’ நூலிலிருந்து)
நிகரன், இதழ் 12, பக்கங்கள் 18,19