அம்மாவின் ஆட்டுக்குட்டி

kavibala ni9

கவிபாலா.

செம்மறிகள் போலில்லை வெள்ளாடுகள். கொஞ்சம் புத்தி மட்டு. அழகாய்த்தான் இருந்தன, சமீபமாய்ப் பிறந்த அந்த ஆட்டுக் குட்டிகள். அதன் துள்ளலும் ஓட்டமும், மான் குட்டிகளை ஞாபகப் படுத்தின. அவை முட்டி முட்டிப் பால் குடிக்கும் போது பால் கட்டியாய் மடியில் இருக்குமோ என நான் சந்தேகித்ததுண்டு.

“புல்லு கடிக்கிற குட்டி சந்தையிலே 4௦௦௦   ரூபா, ஒங்களுக்காவ 3௦௦௦ ன்னு தாரேன்”

நன்றி மறக்கவில்லை கீதாரி.

அழகான பெட்டைக் குட்டி வீட்டுக்கு வந்தாகி விட்டது. குடும்ப உறுப்பினர்களில் புதிதாக ஒரு நபர் சேர்ந்தது போல் இருந்தது எனக்கு. என் மகள் பிரியத்துடன் அதை வருடிக் கொடுத்தபோது கூட அது பயந்து ஓடிக்கொண்டும் கத்திக்கொண்டும் இருந்தது. தனது சொந்த பந்தங்களை அது மறந்திருக்கவில்லை. அன்றிரவு நாங்கள் மட்டுமல்ல எங்கள் வீட்டிற்கு மேல வீடும் கீழ வீடும் தூங்கவில்லை. காலையில் ஒரே புகார் மயம்.

மறுநாள் அதே ஆட்டுக்காரரிடம் அந்தக் குட்டியின் வயதையொத்த கிடா ஒன்றும் விலைக்கு வாங்கிவந்து கட்டினேன். அதுவும் கொஞ்ச நேரம் மருண்டு கத்திக்கொண்டிருந்தாலும்  இரண்டும் கொஞ்ச நேரத்திலேயே சகஜ நிலைமைக்குத் திரும்பியிருந்தது. கிடாமறியை  மோந்து பார்த்தது. தாங்கள் இருவரும் உறவினர்கள் என்பதை உறுதி செய்துகொண்டனர் போலும். அன்றிரவு நிம்மதியாய்த் தூங்க முடிந்தது.

பெட்டை கருப்பாய் இருந்ததனால் கருப்பி என்றும் கிடா வெள்ளையாய் இருந்ததனால் வெள்ளையன் என்றும் இரண்டு குட்டிகளுக்கும் என் பிள்ளைகள் பெயர்  சூட்டி இருந்தனர். அவர்களை எனது தாயார்தான் பராமரித்து வந்தார். நான் தினமும் வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலும் என் தாயார் மீது ரொம்பவே பாசமாயிருந்தனர். நல்ல ஆகாரம் கொடுத்ததினால் ரெண்டுமே கொழுத்து வளர்ந்திருந்தன. பெட்டை படு சுட்டி. கிடா  மகா மந்தம்.

ஒருநாள் ராமாயி பெரியம்மா வீட்டுக்கு வந்தவள் கருப்பி வயதுக்கு வந்துவிட்டதாகச் சொன்னாள். அவள் ஆடு மாடு வளர்ப்பில் அனுபவசாலி. வெள்ளையன் அடிக்கடி தன்  முன்னங்காலைக் கருப்பி மேல் போட்டுக்கொண்டே இருந்தான். என் பிள்ளைகள் அவை சண்டை போடுவதாக எண்ணி ரசித்தார்கள்.

“டேய் அசமந்தம் நீயா இப்படி?” என்று நானே கேலி செய்தேன் வெள்ளையனை. அவர்கள் மூக்கோடு மூக்கு உரசிக்கொண்டபோது ஆங்கில முத்தம் இவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நான் சந்தேகித்ததுண்டு. இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியச் சம்மதிப்பதில்லை.  வெள்ளையன் காலைத் தூக்கிப் போடும்போது கருப்பி மாட்டேன் என்று சொல்வது போல் போக்குக் காட்டும். பின் தானே வந்து வெள்ளையனிடம் வாலைக் காட்டித் திரும்பி நிற்கும்.

“டேய் இது பிஞ்சுக் குட்டிடா.. இன்னும் ஒரு வருஷம் போவனும்” என்றாள் ராமாயி அம்மாள். நான் வெள்ளையனைப் பார்த்தேன். அவன் பரிதாபமாக என்னைப் பார்த்து “நானும் வயசுக்கு வந்துட்டேன்.. ஏன் யாரும் நம்ப மாட்றீங்க” என்று  கேட்பது போலிருந்தது. இருந்தாலும் பெட்டையின் பருவம் கருதி நாயக்கர் பண்ணைக் கிடா வரவழைக்கப்பட்டது. கருப்பி ஒத்துக்கொள்ளவேயில்லை. திமிறிக்கொண்டு வெள்ளையனிடம்  ஓடி வந்து நின்றது. கொழுத்த கிடாவும் கருப்பியின்  பருவம் அறிந்து கூடலுக்குத் தயாராகி இருந்ததினால் மூர்க்கத் தனமாய் விரட்டிக் கொண்டு வந்தது. வெள்ளையன் எதிர்கொண்டான் அவனை. ஒரு அங்குலக் கொம்பையும் பாதி உரோமம் மறைத்திருந்தது. நாயக்கர் பண்ணைக் கிடாவுக்கோ முக்கால் அடிக்குக் கொம்பிருந்தது. நான் போய் இருவரையும் ஆசுவாசப் படுத்தினேன். கடைசியில் கருப்பி தோற்றுப் போனது. கண்ணெதிரே ஒரு கற்பழிப்பைக் கண்டவன் போல் மிரண்டு போயிருந்தான் வெள்ளையன்.

“வெள்ளையா பொம்பளைக சீக்கிரமே வயசுக்கு வந்துருவாக. நீ கொஞ்சம் பொறுக்கணும். கருப்பி ஒனக்குத்தான். அடுத்த ஈத்துக் குட்டி ஒனக்குப் பொறந்ததாகத்தான் இருக்கும். இது சத்தியம்.”

அவனுக்குத் தடவிக் கொடுத்த படியே நான் ஆறுதல் சொன்னது கொஞ்சம் இதமாய் இருந்திருக்க வேண்டும். என் பேச்சை உண்மையென்று அவன் நம்பினாலும் கருப்பியும் வெள்ளையனும் இரண்டு  நாட்களாகப்  பேசிக் கொள்ளவேயில்லை. இருவருமே களைத்துப் போயிருந்தனர். ஆகாரம் கொள்ளவில்லை.

கருப்பியின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. வெள்ளையன் அவளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான். நிறைய மாற்றங்கள் கருப்பியிடம். மீண்டும் அவன் அவளிடம் சில்மிஷம்  செய்தாலும் தன்  கர்ப்பத்தைப் பாதுகாக்க அவனை அண்டவிடவில்லை.

திடீரென்று ஒருநாள் அம்மா என்னை எழுப்பி, “ஐயா, முனியாண்டி நேத்துக் கனவுல வந்தாருய்யா. தும்ப நெறமா  வானத்துக்கும்  பூமிக்குமா  நின்னாரு. புல்லரிக்கு பாரேன்” ,என்றாள்.

தன் இடது கையை வலது கையால் தடவிக் கொண்டே “வந்து, நம்ம வெள்ளையனைக் காட்டி இத என் கோயிலுக்கு நேமிச்சு விடுன்னு சொல்லிட்டு போயிட்டாரு”.

அம்மா சொன்னபோது ஆச்சரியமும் தெய்வ பயமும் அவள் முகத்தில் தெரிந்தது. எனது பகுத்தறிவின் மறுப்பிற்கு அவள் அழுகையைப் பதிலாக்கினாள்.

“இன்னும் நாலு நாள்ல கருப்பி ஈன்றும்”னு  ராமாயி சொன்னதை வெள்ளையனும் கேட்டான். அதற்கப்புறம் அவன் ரொம்பவே மாறிவிட்டான். ஆறு அடிச் சுவரை அநாயாசமாகத்  தாண்டினான். குட்டிச் சுவர் மேலேறி அங்கிருந்து தாவிக் குதிப்பான். கருப்பியும் அவனைக் கவனித்து வந்தாள். இதுவும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளோ என்னவோ?

கருப்பியும் அவனை விரும்புகிறாள்.

ஆனால் “இப்போதைக்கில்லை” என்ற அவள் வார்த்தை அவனுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்.

“பாத்தியா ஐயாவுக்கு நேமிச்சதுமே அவன் சேட்டயப்  பாரு”.  இது  அம்மா.

“அவர் கொனத்தக் காட்டுவாருல்ல”  என்றாள்  பெரியம்மா.

இரண்டு குட்டிகள் போட்டாள் கருப்பி. என் அம்மாவுக்கோ சந்தோசம்.

வெள்ளையன் கருப்பியைப் பரிவோடு கவனித்துக் கொண்டான். அவள் மூக்கோடு மூக்கு வைத்து அவர்கள் பேசிக் கொண்ட போது “என்னை மன்னிச்சுரு”  என்று கருப்பி சொன்னதாக எனக்குக் கேட்டது.

நாள் குறிக்கப்பட்டது .. கோவில் நேர்த்திக்கடன் செலுத்த.

இரண்டு குட்டிகளுக்கும் போதுமான பால் இருந்தது. அந்தக் குட்டிகளுக்கு தார்மீகத் தந்தையாகப் பொறுப்பேற்றிருந்தான் வெள்ளையன். புல் கடிக்க அவன்தான் கற்றுக் கொடுத்தான். அந்த நால்வரின் நடவடிக்கையால் வீடே அமர்க்களப்பட்டுக் கிடந்தது.

காரியத்தில் கண்ணாயிருந்தான் வெள்ளையன்.

“கொஞ்சம் பொறு. நாம என்ன மனுசங்களா. அதுக்குனு கால நேரம் வரவேண்டாமா?”

ஆமோதித்தான்.

அந்த நாளும் வந்தது. கருப்பியே வெள்ளையனைத் தூண்டினாள். நுனிக் கொம்பில் தொங்கும் குரங்கைப் போல் வெள்ளையனின் ஆசைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அன்றைய தினம் வீட்டில் ஆள் நடமாட்டம் வழக்கத்திற்கதிகமாக இருந்தது. கண்ணியம் காத்தனர் இருவரும். அவர்களுக்குள் ஏதோ முனகிக் கொண்டவர்கள் ஒரு வழியாய் “நம்ம வீட்டுல ஏதோ விசேசமாம். ஆளுகளெல்லாம் போவட்டும்” என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள்.

ஆடுவெட்ட வெளியூரிலிருந்து ஆள் வந்திருந்தார்கள். அதில் ஒருவன் வெள்ளையனை அவிழ்க்க முற்படும் போது சீறிப் பாய்ந்து ஒரு முட்டு முட்டியதில் அவன் தொடையெல்லாம் ரத்தம். முட்டுப் பட்டவனோ ஒரு கம்பை எடுத்து ஓங்கியவனாய் “கோயில் ஆடுன்னு பாக்குறேன்.. இல்ல இங்கயே உறிச்சுருவேன் பாத்துக்கோ” என்று மிரட்டினான்.

இவங்கல்லாம் யாரு என்று என்னைக் கேட்பது போல் பார்த்தான் வெள்ளையன்.

“ஏலே என்ன பண்ற ..நேரமாச்சு. இன்னும் கெளம்பாம தூங்கு மூஞ்சியோட நிக்குற”. அம்மா கடிந்துகொண்டாள்.

வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றப்பட்டான் வெள்ளையன்.

கருப்பியும் குட்டிகளும் கலைந்தோடின.

வண்டிக்குள் மிரண்டும் திமிறிக் கொண்டும் இருந்த வெள்ளையன் என்னைப்  பார்த்ததும் “நீயுமா?” என்பது போல் பார்த்தான்.

“நீங்க போங்க நான் பின்னாடி வர்றேன்” என்றேன்.

வண்டி உருளத் தொடங்கியதுமே வெள்ளையன் ஒரே தாவாகத் தாவி கருப்பியிடம் வந்தான். ஆடு வெட்டிகள் இரண்டு பேருமே ஓடி வந்தார்கள். அவனைப் பிடிக்க. ஏற்கனவே முட்டுப் பட்டவன் விலகிக் கொண்டான். மற்றவன் பிடித்து விட்டான்.

கருப்பியை ஒரு முறை முகர்ந்து பார்த்த வெள்ளையன் தனது பிறப்பின் நோக்கம் இதுதானோ என்று புரிந்து கொண்டவனாய் அமைதியாய் வண்டியில் ஏறினான்.

அதன் பிறகு கருப்பி இன்று வரை கருத் தரிக்கவேயில்லை.

(நிகரன், இதழ்-9, பக்கங்கள்-5,6,7)