ஒருகுடம் தண்ணி ஊத்தி

kanmaniraasaa ni8

 

 

ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததாம்…
விளையாட்டு தொடங்கியிருக்கும் வீதியில்.
சீக்கிரம் போகவேண்டும்
இல்லாவிட்டால்..
எல்லோரின் பூக்களும் பூத்திருக்க
இவளின் பூ மட்டும் காத்திருக்கும்.

அப்புறம்..
தீப்பெட்டி ஆபீசிலிருந்து அம்மா
திரும்பி வரும்முன்
தெருக் குழாயிலிருந்து
தண்ணீர் பிடிக்க வேண்டும்.
பிறகு..
17ம் பக்க மயிலிற்கு
வண்ணம் தீட்டவேண்டும்.
விட்டு விட்டால்
நாளை வகுப்பில்
வண்ணமின்றி வாடிநிற்கும்
இவளின் மயில் மட்டும்.

இவ்வளவு வேலைகள் இருக்கு..
லட்சுமிக் குட்டிக்கு.

முதலில்
வேட்டி விலகி வீதியில் கிடக்கும்
அப்பாவை
வீடு வந்து சேர்க்க வேண்டும்.

கண்மணிராசா.
(நிகரன், இதழ்-8, பக்கம்-2)