காரல் மார்க்ஸ்

marx ni1

மார்க்ஸின் தகப்பனார் இறந்த பிறகு மார்க்ஸுக்கும் இவனுடைய குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமலேயே போய்விட்டது. “குடும்பத்திற்குப் புறம்பானவனாகிவிட்டான் மார்க்ஸ்” என்று இவனுடைய தாயார் கூறிக்கொண்டு வந்தாள். இவனுடைய புது முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவந்தாள். அவள், தான் இறந்து போகிறவரை, தன் மகனுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. உதவி செய்யாமலிருந்ததோடு இவனுடைய பணக் கஷ்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியும் அடைந்தாள். ஐயோ, லட்சியவாதிகள் தங்கள் தாயாரின் கோபத்திற்கும் சாபத்திற்கும்கூட ஆளாக வேண்டியதிருக்கிறது.

வெ.சாமிநாதசர்மா,
நூல்: காரல் மார்க்ஸ்.

(நிகரன், இதழ் 1, பக்கம் 5)

இப்படிச் செய்ய எத்தனை பேரால் முடியும்?

gandhiji ni1

சத்திய சோதனை. மூன்றாம் பாகம். 12ஆம் அத்தியாயம். போயர் யுத்தத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரோடு சேர்ந்து மருத்துவ சேவை செய்து முடிந்தது. நேடாலில் பஞ்ச நிவாரணம் மற்றும் சுகாதார சேவைகள் செய்து முடிந்தது. இனி தென் ஆப்பிரிக்காவில் தான் இருந்தால் வெறுமனே பணம் பண்ணுவது ஒன்றே தன் பிரதான வேலை ஆகிவிடும் என்று பயந்தார் காந்தி. இந்தியாவுக்குத் திரும்புவதென்று முடிவு செய்கிறார். தென் ஆப்பிரிக்க இந்திய சமூகம் அவரை விடுவதாயில்லை. இறுதியில், தேவைப்பட்டால் ஒரு ஆண்டுக்குள் தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பத் தயார் என்ற நிபந்தனையோடு காந்தி இந்தியா திரும்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேடால் இந்தியர்கள் காந்தி குடும்பத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள். விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளி மற்றும் வைரத்திலான பொருட்கள், கடிகாரம், மோதிரம் என்று குவிந்துவிட்டன. கஸ்தூரிபா காந்தி அவர்களுக்கும் ஒரு விலையுயர்ந்த வைர நெக்லஸ் பரிசளிக்கப் பட்டது. இந்தப் பரிசுப் பொருட்களின் சுமை தாங்காமல் அன்று இரவு காந்தி அவர்களுக்கு தூக்கம் வரவில்லை. விலையுயர்ந்த அந்தப் பரிசுப் பொருட்களைத் தான் வைத்துக் கொள்வது தகாது என்று கருதினார். சேவைக்காக பணம் பெற்றால் அது சேவை ஆகாது என்பதும் பொது சேவையில் இருக்கும் ஒருவர் எளிமையாக வாழவேண்டும் என்பதும் அவர் கொள்கை. சேவை அதற்கேயுரிய வெகுமதியைப் பெறும் என்று நம்பினார். தனது குழந்தைகளும், மனைவியும்கூட இத்தகைய வாழ்க்கை முறைக்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். எனவே அந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம் ஒரு அறக்கட்டளையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் தென் ஆப்பிரிக்க இந்தியர் சமூகத்தின் செயல்பாடுகள் தடையின்றி நடக்க வழிசெய்வது என்று முடிவு செய்தார். ஆனால், கஸ்தூரிபா காந்தியிடம் இருந்து அந்த நெக்லஸைத் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. உணர்ச்சி மயமான போராட்டத்தில் குழந்தைகளைத் தனக்காகக் கஸ்தூரிபாவிடம் வழக்காடச் செய்தார். கஸ்தூரிபாவோவெனில் தனக்குப் பரிசளிக்கப்பட்ட நகையை காந்தி எப்படிக் கேட்கலாம் என்று வாதிட்டார். காந்தியோ அது தனது சேவைக்காகவே கஸ்தூரிபாவுக்குக் கொடுக்கப்பட்டது என்று விளக்கினார். கடுமையான போராட்டத்தின் இறுதியில் காந்தி வெற்றிபெற்றார். பரிசுப் பொருட்கள் எல்லாம் வங்கிக்குப் போனது டிரஸ்ட் பெயரில் டெபாசிட்டாக.

(நிகரன், இதழ் 1, பக்கம் 12)

நவம்பர் புரட்சியின் நினைவாக..

உலகின் முதல் உழைக்கும் மக்கள் ஆட்சி 1871ல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் கம்யூன் என்ற பெயரில் அமைந்தது. அந்த ஆட்சி வெறும் 72 நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்தது. அந்த அரசின் தோல்விக்குப் பிறகு அப்படி ஒரு அரசு இனி உலகில் எப்போதும் தோன்ற முடியாது என்றுதான் பலரும் நினைத்தனர். மீண்டும் 45 ஆண்டுகளுக்குப் பின் 1917 நவம்பர் 7 அன்று ரஷ்ய நாட்டில் தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த முறை உழைக்கும் மக்களின் ஆட்சி திடமாகவோ நோயுற்றோ 72 ஆண்டுகள் உயிருடன் இருந்தது. பல்லாயிரக் கணக்கானவர்கள் புரட்சியின்பொது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது பாசிச ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கெதிரான போரில் இரண்டரை கோடி மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து அந்த ஆட்சியைக் காத்தனர். அந்த தியாகங்களைஎல்லாம் வீணடித்து ரஷ்யாவில் மீண்டும் முதலாளியத்தை மீட்டெடுத்த சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆதரவான அந்தக் கூட்டம் கம்யூனிஸ்டுக் கட்சி என்ற பெயரில்தான் கடைசிவரை இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் வைத்திருப்பதாலேயே ஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஆகிவிடாது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட சாட்சி ஆகிப் போனது. சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்ட அலைகள் ஒருபோதும் ஓயாது. ஒவ்வொரு நவம்பரும் ரஷ்ய நாட்டின் புரட்சியாளர்களின் தியாகத்தை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

(நிகரன், இதழ்-9, பக்கம்-2)

‘விடுதலைப் போராளி’ ஜி.இராமச்சந்திரன்

g.ramachandran ni9

‘விடுதலைப் போராளி’ ஜி.இராமச்சந்திரன் – நூலிலிருந்து ஒரு அத்தியாயம்.

30.மதுரை மத்திய சிறையில்

( என்னைப் பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி)

இடம்: மதுரை மத்திய சிறை 9 ஆம் பிளாக்

(சுமார் 150 பேர்கள் மத்தியில் விமர்சனம்)

இவருக்கு சிவகங்கை, பரமக்குடி, திருப்பத்தூர் தாலுகாவில் வேலை செய்யும்படி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைவதற்கான அம்சங்கள் இவரிடத்தில் இல்லை. வெகு உற்சாகமாகவும், கிராமம் கிராமமாக 24 மணி நேரமும் சுற்றுவார். ஆனால் இது மிகச் சாதாரணமான வேலைதானென்றும் தோழர்கள் குறை சொல்வார்கள்.

குறை: இவர் ஒரு கருமியாய் இருக்கிறார் (சிவப்பி, பெரியநாச்சி)

கருமித்தனம் என்றால் என்ன?

நான் என் பிரதேசத்திலிருந்து செல்லும்போது ரூபாய் 10/-ம் ஒரு ஜதை வேஷ்டிகளும் எடுத்துச் சென்றேன். அச்சமயம் நான் வீட்டிற்கே செல்ல முடியாது. திருப்பத்தூர் தாலுகாவில் 15 தினங்கள் தங்கிவிட்டு சிவகங்கை தாலுகாவுக்கு வந்தேன்.சிவகங்கை தாலுகாவில் 2, 3 மாதங்கள் கழித்த பிறகு ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு  வருகிறது. அதை இங்கு குறிப்பிடுகிறேன்.

அச்சமயம் என் கையில் பணம் தீர்ந்து போயிற்று. பிரசுர விற்பனைப் பணத்தை கையாட வேண்டிய நிலையாயிருந்தது. அதில் ஒரு ரூபாய் வரை செலவழித்து விட்டேன். அதற்கு எனக்குப் பணம் கொடுக்கும் தோழர் கூடக் கோபித்துக் கொண்டார். என் வேஷ்டிகள் பூராவும் கிழிந்து கந்தலில் கந்தலாக இருந்தது. அத்துனியைத் தவிர வேறு வழியிலாமல் இரண்டு மாதம் ஓடியது. அச்சமயத்தில் ஒரு தோழர் வந்தார். அவர் பேஸ்ட், பிரஷ், மார்கோ சோப்பு, கண்ணாடி, சீப்பு, ஹேராயில், 5,6 ஜதை உடைகள் மற்றும் பல நாகரீக பாசன்களில் தேர்ந்ததாக கையில் ஒரு பெட்டியை ஒரு பையன் தூக்கி வர வந்து சேர்ந்தார். அவரிடம் ஒரு வேஷ்டியைக் கொடுத்து விட்டு வீட்டில் போய் வாங்கிக் கொள்ளும்படி யாசித்தேன். மறுத்துவிட்டார். என் மனம் புண்பட்டது. பிறகு கூலி விவசாயிகள் தாங்களாகத் தங்கள் கூலி நெல்லை விற்று எனக்கு ஒரு வேஷ்டியும் ஒரு துண்டும் ரூபாய் 5 க்கு வாங்கிக் கொடுத்தார்கள்.

எனக்காக என் வீட்டில் மாதம் ரூபாய் 15/- வீதம் என் தாயார் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பைசா கூட எனக்கு வந்து சேரவில்லை. அச்சமயம் வந்த அந்த நவநாகரீகத் தோழர் நான் பசியும் பட்டினியுமாக வேலை செய்வது தெரிந்தும், தன்னிடம் பணம் இருந்தும் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அல்வாவும், பிரியாணிகளும் பிளேட் கணக்கில் உள்ளே தள்ளி கொக்கோ பானங்களுடன் ஸ்னோவும், பேஸ்பவுடர்களுடன் வாழ்க்கை நடத்துவது என் கண் முன்னால் நடந்து கொண்டு தான் இருந்தது. அவ்விதமிருப்பது தான் வளர்ச்சிக்கு உதவும் வளர்ச்சிக்கான அம்சங்கள் போலும்?. அதை எங்கே நான் உணரப் போகிறேன்? மேற்கண்ட கோணத்தில் வளரும் அம்சம் என்னிடத்தில் இல்லை தான். அது என் கருமித்தனமாக இருக்கலாம். அது தான் என் கருமித்தனத்தின் அர்த்தம். அதன் பிறகு தையல் வேலை செய்யும் தோழர் ஒருவர் ட்ரவுசர் ஒன்று கொடுத்தார்.

எனக்குத் துணி கொடுக்க மறுத்த தோழர் என் வீட்டில் போய் வாங்கிய துணிகளில் சிலவற்றைத் தானே எடுத்துக் கொண்டார். அந்த ஊதாரித் தோழர் ஆற்றில் குளித்து விட்டு தன மார்கோ சோப்பை போட்டு விட்டு போய்விட்டார். அந்த சோப்பை பெண் தோழர்களும் நானும் உபயோகப் படுத்தினோம். நான் அடிக்கடி அப்பிரதேசத்திற்குச் சென்று தங்குவதும் உண்டு. நாக்குக்கு ருசியான ஆகாரங்களுக்கு ஆசை இருந்தது. என் நாக்கு அறுக்கப் பட்டிருக்கவில்லை. என் கருமித்தனம் என் தொண்டையைப் பிடித்து நெருக்கி அடைத்து சாப்பிட தடை செய்யவில்லை. ஆனால் என்னிடம் பணமில்லை – வறுமை.

நிகரன், இதழ்-9, பக்கங்கள்- 38,39)

கடுகு உள்ளம்

barathithaasan ni2

 

 

 

 

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்.

பாரதிதாசன்.
(நிகரன், இதழ்-2, பக்கம்-2)

வீரம் விளைந்தது

nikolai ostrovsky ni2

 

 

 

 

 

வீரம் விளைந்தது. எழுதியவர் நிகோலாய் ஒஸ்திரோவஸ்கி. ஆங்கிலத்தில் “ஹவ் தி ஸ்டீல் வாஸ் டெம்பர்டு”. ரஷ்யப் புரட்சியின் தொடர்ச்சியான உள்நாட்டுப் போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு லட்சிய இளைஞனின் கதை. கதையின் ஊடே வரும் இந்தப் புகழ்பெற்ற வரிகள் இந்தக் கதையின் சிறப்புக்குச் சான்று.

“வாழ்வு சகிக்க முடியாததாக ஆனபிறகும் எப்படி வாழ்வதென்பதைக் கற்றுக்கொள். உன் வாழ்வைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்.”

“மனிதனது மதிக்கமுடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவை தான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமை பெரும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ, வாழ்வுக்கு வெடி வைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

பாவெல் கர்ச்சாகின் ரஷ்ய இலக்கியம் படைத்துள்ள மிகச் சிறந்த கதாபாத்திரங்களுள் ஒன்று. எப்படி கர்ச்சாகினுடைய தனிச் சிறப்பான குணங்கள் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஊடாக வளர்ந்து முழுமை பெறுகின்றன என்பதோடு சோஷலிச லட்சியம் மிக உயர்ந்த வாழ்வியல் அறநெறிகளோடு பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளது என்பதையும் சித்தரிக்கும் நாவல்.

(நிகரன், இதழ்-2, பக்கம்-19)

பெரும்பான்மையோரின் நலனுக்காக

castro ni1

 

 

வரலாற்றின் பெரும் புரட்சிகளின் பிரமாதமான வெளிப்பாடுகளால் நான் தூண்டப்பட்டேன். ஏனெனில் அவை, எப்போதுமே சுயநல வெறி பிடித்த சிறிய கூட்டத்துக்கெதிராக பெரும்பான்மையோரின் நலனையும், மகிழ்ச்சியையும் முன்னிலைப் படுத்தி அந்த நோக்கத்தின் வெற்றியைக் குறித்தன.

எந்த நிகழ்ச்சி என்னை அதிகமாக நெகிழ்வித்தது தெரியுமா? ஹைத்தியில் கருப்பு அடிமைகளின் புரட்சிதான். நெப்போலியன் சீசரைப் பின்பற்றியபோது, பிரான்ஸ் ரோமைப் பிரதிபலித்தபோது, ஸ்பார்டகஸின் ஆன்மா டௌசெயின்ட்ஸ்-எல்-ஓவர்ச்சராக மறுபிறவி எடுத்தபோது, ஒரு சுதந்திரமான குடியரசை உருவாக்க நெப்போலியனின் பெரிய தளபதிகளை ஆப்பிரிக்க அடிமைகள் வெற்றிகொண்ட உண்மைச் சரித்திரத்துக்கு எவ்வளவு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதற்குப் பிறகு ஹைத்தி  மிகவும் முன்னேறிவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால் மற்ற லத்தீன் அமெரிக்கக் குடியரசுகள் அதிகமாக முன்னேறி விட்டனவா?

நான் இந்த விஷயங்கள் குறித்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், இந்த நாட்டைக் கீழிருந்து மேல் முழுவதுமாக புரட்சிகரமாக மாற்ற முடிந்தால் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேன். அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவர்களுக்காக எனது சில  உறவினர்கள், எனக்குத் தெரிந்தவர்களில் பாதிப் பேர், எனது தொழில் ரீதியான நண்பர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், எனது முன்னாள் சக மாணவர்களில் நான்கில் ஐந்து பங்கினர் உள்ளிட்ட சில ஆயிரம் தனி மனிதர்களின் வெறுப்பையும் பகைமையையும் சம்பாதித்துக் கொள்ளவும் நான் தயார்.

(ஏப்ரல் 15, 1954ல் சிறையிலிருந்து பிடல் காஸ்ட்ரோ எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி)(நிகரன், இதழ் 1)

வேடிக்கை மனிதர்

2015-12-08_091023

 

தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

மகாகவி பாரதியார்
(நிகரன், இதழ் 1, பக்கம்-20 )

சுதந்திரம் பொதுவானதா?

lenin ni9

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது  சுதந்திரம், சமத்துவத்தைப் பற்றிய ஆர்ப்பாட்டமான சொற்றொடர்கள், கம்பீரமான வார்த்தைகள், தாராளமான வாக்குறுதிகள், பகட்டோசையுடைய கோஷங்களின் ஜனநாயகமாகும். ஆனால் நடைமுறையில், இவையெல்லாம், மாதர்களுக்கு சுதந்திரம் இல்லாமையையும், அசமத்துவம் இருப்பதையும், உழைப்பாளி மக்களுக்கும், சுரண்டப்பட்ட மக்களுக்கும் சுதந்திரமின்மையும், சமத்துவமின்மையும் நிலவுவதையும் திரையிட்டு மறைக்கிறது.

………. …………………. …. …. …. ….. ….. ….. ……

இந்த வஞ்சனையான பொய்மை ஒழிக! ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குகிறவர்களுக்குமிடையில், சுரண்டப்பட்டவர்களுக்கும், சுரண்டுகிறவர்களுக்குமிடையில் எவ்வித “சமத்துவமும்” இல்லை, இருக்கவும் முடியாது. சட்ட பூர்வமான சலுகைகள் ஆண்களுக்கு ஆதரவாக இருப்பதின் காரணமாக மாதர்கள் பாதிக்கப்பட்டுள்ள வரையில் உண்மையான “சுதந்திரம்” இல்லை, இருக்காது, இருக்க முடியாது. மூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்து தொழிலாளி சுதந்திரம் பெறும் வரையில், முதலாளி, நிலப்பிரபு, வியாபாரி ஆகியோரின் ஆதிக்கத்தின் கீழிருந்து உழைக்கும் விவசாயி சுதந்திரம் பெறும் வரையில் உண்மையான “சுதந்திரம்” இல்லை, இருக்காது, இருக்கவும் முடியாது.

பொய்யர்களும் பாசாங்குக்காரர்களும் முட்டாள்களும் குருடர்களும் முதலாளிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் பொதுவான சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் பேசி மக்களை ஏமாற்ற முயலட்டும்.

தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நாம் கூறுவோம்: இந்தப் பொய்யர்களின் முகமூடியைக் கிழியுங்கள், இந்தக் குருடர்களின் கண்களை திறவுங்கள். அவர்களைக் கேளுங்கள்:

எந்தப் பாலினத்துக்கு எந்தப் பாலினத்துடன் சமத்துவம் உள்ளது?

எந்தத் தேசிய இனத்திற்கு எந்தத் தேசிய இனத்துடன் சமத்துவம் உள்ளது?

எந்த வர்க்கத்திற்கு எந்த வர்க்கத்துடன் சமத்துவம் உள்ளது?

எந்த ஆதிக்கத்தின் கீழிருந்து, அல்லது எந்த வர்க்கத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்து சுதந்திரம்? எந்த வர்க்கத்திற்கு சுதந்திரம்?

இந்தப் பிரச்சினைகளை முன்வைக்காமல், அவைகளுக்கு முதலிடம் கொடுக்காமல், இந்தப் பிரச்சினைகளைப் பற்றி வாய் மூடி மௌனியாயிருப்பதையும், மூடி மறைப்பதையும், முளை மழுங்கச் செய்வதையும் எதிர்த்துப் போராடாமல், அரசியல், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றிப் பேசுகின்றவர் உழைப்பாளி மக்களின் மோசமான விரோதியாவார்; ஆட்டுத் தோல் போர்த்த ஒநாயாவார்; தொழிலாளர், விவசாயிகளின் கடும் வைரியாவார்; நிலப் பிரபுக்கள், ஜார்கள், முதலாளிகளின் கைக்கூலியாவார்.

(சோவியத் ஆட்சியதிகாரமும் மாதர்களின் அந்தஸ்தும் என்ற பொருளில் பிராவ்தா இதழ்  249 ல், நவம்பர் 6, 1919ல்  வெளியான  தோழர் லெனின் அவர்களுடைய படைப்பின்  தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபகுதி)

(நிகரன், இதழ்-9, பக்கம்-18)

சுதந்திரத்தின் எல்லை

ஆங்கில மூலம்: ஏ.ஜி.கார்டினர்.

தமிழில்: ஆதவ்.

அது ஒரு வேடிக்கையான கதைதான். முன்பொருநாள் விமர்சகரும் சிறுவர்களுக்கான நூல்கள் எழுதுபவருமான ஆர்தர் ரான்சம் ரஷ்யாவிலுள்ள பெட்ரோகிராட் நகரத்திலிருந்து அவரது செய்திகளில் ஒன்றில் சொல்லியிருந்தது. பருத்த உருவமுடைய வயதான பெண்மணி ஒருத்தி தனது கூடையுடன் எந்தப் பயமுமின்றி போக்குவரத்திற்கு மிகுந்த குழப்பத்தை உண்டாக்கும் வகையில் பெட்ரோகிராடின்  வீதிகளில் ஒன்றின் நடுவே நடந்து சென்றுகொண்டிருந்தாள். நடைமேடையே நடந்து செல்லும் பயணிகளுக்கான பாதை என்று அவளுக்கு அறிவுறுத்தப் பட்டபோது, அவள் சொன்னாள்: “நான் எங்கு நடக்க விரும்புகிறேனோ அந்த வழியேதான் நடப்பேன். இப்போது நாங்கள் சுதந்திரம் பெற்றிருக்கிறோம்”. சுதந்திரம் ஒரு நடை பயணிக்கு சாலையின் நடுவில் நடப்பதற்கான உரிமையை அளிக்கும் என்றால் அதுவே ஒரு கார் டிரைவருக்கு அவருடைய காரை நடை மேடையின் மேலே ஓட்டிச் செல்வதற்கும் உரிமை அளிக்கிறது என்பது அந்த வயதான நேசத்திற்குரிய பெண்மணிக்குப் புலப்படவில்லை. இத்தகைய சுதந்திரங்களின் முடிவு உலகு தழுவிய குழப்பமாகத்தான் இருக்கும். எந்த ஒருவரும் இன்னொருவருடைய பாதையில் செல்ல முடியும்  அதே சமயம் ஒருவரும் எங்கு வேண்டுமானாலும் செல்லமுடியாது. அப்போது தனி மனித சுதந்திரம் என்பது சமூக அராஜகமாக அல்லது சமூக ஒழுங்கீனமாக ஆகிவிடும்.

கூடையுடன் நடுச் சாலையில் நடந்து சென்ற அந்த வயதான பெண்ணைப் போல உலகம் சுதந்திர போதை கொள்ளும் அபாயமும் இருக்கிறது. ஆகவே நமக்கு நாமே சாலை விதிகளின் அர்த்தத்தை நினைவு படுத்திக் கொள்வது நல்லது. எல்லோருடைய சுதந்திரமும் பாதுகாக்கப் பட வேண்டும் என்றால் ஒவ்வொருவருடைய சுதந்திரமும் வரம்புக்குட்பட்டதாயிருக்க வேண்டும் என்பதையே அது அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, லண்டன் நகரின் பிக்காடில்லி மையச் சந்திப்பில் சாலையின் நடுவில் நின்றுகொண்டு ஒரு போக்குவரத்துக் காவல்காரர் தன் கையை முன்னே நீட்டி வாகனங்களைத் தடுக்கிறார் என்றால் அது எதேச்சாதிகாரத்தின் குறியீடு அல்ல. மாறாக சுதந்திரத்தின் குறியீடு. நீங்கள் ஒருவேளை இதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு அவசரத்தில் இருக்கையில் அந்தப் போக்குவரத்துக் காவல் அதிகாரி தன்  முரட்டுத் தனமான கடமையுணர்வால் உங்கள் காரை மறித்து நிறுத்தும்போது அது உங்கள் சுதந்திரத்தின் மீதான பெரும் வன்முறையாக நீங்கள் அதைக் கருதலாம். ஒரு பொது நெடுஞ்சாலையை நீங்கள் சுதந்திரமாக உபயோகிப்பதில் குறுக்கிட அந்த நபருக்கு என்ன தைரியம்? நீங்கள் ஒரு அறிவார்ந்த நபராக இருக்கும் பட்சத்தில் அவர்  உங்களுடைய சுதந்திரத்தில் குறுக்கிட முடியாதபோது வேறு எவருடைய சுதந்திரத்திலும் குறுக்கிட முடியாது என்பதையும், அதன் விளைவாகப் பிக்காடில்லி மையச் சந்திப்பில் பெரும் குழப்பத்தின் புயல் வீசும் என்பதையும், உங்கள் கார் அந்த இடத்தைக் கடந்து செல்லவே முடியாது என்பதையும் புரிந்துகொள்வீர்கள். உங்கள் தனி மனித சுதந்திரத்தை நிஜமாக்கக் கூடிய ஒரு சமூக ஒழுங்கை அனுபவிப்பதற்காகவே  உங்கள் தனிப்பட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் இசைந்துள்ளீர்கள்.

சுதந்திரம் என்பது தனியாள் விடயமல்ல அது ஒரு சமுதாய ஒப்பந்தம். அது ஒரு நலன்களின் சகவாழ்வு. பிறருடைய சுதந்திரத்தைப் பாதிக்காத வரை ஒருவேளை நான் விரும்பியபடி நடக்க எனக்குச் சுதந்திரமிருக்கலாம். லண்டன் நகரின் புகழ்பெற்ற ஸ்ட்ராண்டு வீதியில் நீண்ட தலைமுடியுடன், செருப்பணியாத வெறும் கால்களுடன் ஒரு கவுனை உடுத்திக் கொண்டு செல்ல விரும்பினால் யார் என்னைத் தடுக்க முடியும்? என்னைப் பார்த்துச் சிரிப்பதற்கு உங்களுக்குச் சுதந்திரம் இருக்கலாம். ஆனால் உங்களில் இருந்து வித்தியாசமானவனாக இருக்க எனக்குச் சுதந்திரம் இருக்கிறது. என் தலை முடிக்குச் சாயம் பூசிக் கொள்ளவோ , என் மீசைக்கு மெழுகு தடவிக் கொள்ளவோ அல்லது ஒரு நீளமான தொப்பியையோ அல்லது ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆண்கள் அணியும் முழங்கால் அளவுக்கான கோட்டையும் காலணிகளையும் அணிந்து கொள்ளவோ அல்லது இரவில் தாமதமாகத் தூங்கச் செல்வதையோ அல்லது அதிகாலையில் சீக்கிரமே விழித்தெழவோ  நான் விரும்பினால் இவற்றை என் விருப்பப்படி கடைப்பிடிக்க எந்த ஒரு மனிதனின் அனுமதியும் தேவையில்லை. நான் மாமிசம் சாப்பிடும்போது அதனோடு கடுகைச் சேர்த்துச் சாப்பிடலாமா கூடாதா என்று உங்களிடம் கேட்க வேண்டியதில்லை. நான் ஒரு கறுப்பான அல்லது சிவப்பான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ, வேர்ட்ஸ்வொர்த்துக்குப் பதிலாக யல்லா வீலர் வில்காக்ஸ் நூல்களை வாசிக்கும்படியோ, ஷண்டிகாப் மதுவுக்குப் பதில் சாம்பேன் மதுவைக் குடிக்கும்படியோ நீங்கள் என்னைக் கேட்க முடியாது.

மேற்குறிப்பிட்ட இந்த எல்லா விடயங்களிலும், இதுபோன்று இன்னும் ஓராயிரம் விடயங்களிலும் நீங்களோ நானோ யாருடைய அனுமதியையும் கோராமல் நம்மை நாமே திருப்பதிப் படுத்திக் கொள்ளலாம். மரபானதோ புதியதோ, கடினமானதோ எளிதானதோ, ஞானமானதோ கேலிக்குரியதோ நாம் விரும்பியதைச் செய்யக்கூடிய நாம் மட்டுமே தனித்து ஆளுகை செய்யக்கூடிய ஒரு ராஜ்யத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் எப்போது நமது ராஜ்யங்களை விட்டு நேரடியாகப் பொது வெளிக்கு வருகிறோமோ அப்போது நமது தனி மனித சுதந்திரச் செயல்பாடு பிற மனிதர்களின் சுதந்திரத்தால் தகுதிப்படுத்தப் படுகிறது. நள்ளிரவு தொடங்கி விடிகாலை 3மணி வரையிலும் கனத்த ஒலியெழுப்பும்  பித்தளை குழல் வாத்தியமான ட்ராம்போனை ஊதிப் பயிற்சி செய்ய நான்  விரும்பலாம். இங்கிலாந்தின் வேல்ஸ் பிரதேசத்தின் உயர்ந்த மலைச் சிகரமான ஹெல்வெல்லின் குன்றுகளின் உச்சிக்குச் சென்று வேண்டுமானால் நான் அதைச் செய்ய முடியும். அதை நமது வீதிகளில் செய்வேனானால் அக்கம்பக்கத்தவர்கள் ட்ராம்போன்  வாசிப்பதற்கான எனது சுதந்திரம் அமைதியான சூழலில் உறங்குவதற்கான அவர்களின் சுதந்திரத்தில் குறுக்கிடக் கூடாதென்பதை எனக்கு ஞாபகப் படுத்துவார்கள். உலகம் அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறது. என்னுடைய சுதந்திரம் அவர்களுடைய சுதந்திரத்தோடு ஒத்துப் போவதாய் இருக்க வேண்டும்.

நாம் எல்லோருமே இதை நினைவில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். துரதிருஷ்டவசமாக நாம் நம்முடைய குறைகளைப் பார்க்கிலும் மற்றவர்களுடைய குறைகளின் பேரிலேயே அதிகமதிகமாய் கவனம் செலுத்துகிறோம்.

ஒரு காலையில் கிராமப்புற ரயில் நிலையம் ஒன்றில் ஒரு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்திகள் அடங்கிய நீலப் புத்தகத்தை பள்ளிப் பிள்ளைகள் கேலியாகச் சொல்வதுபோல் ஒரே மூச்சில் படித்து முடிக்க ஆயத்தமானேன். அதை நான் பொழுதுபோக்குக்காகப் படிக்கவில்லை. உண்மை என்னவென்றால் நான் ஒருபோதும் நீலப் புத்தகத்தை பொழுதுபோக்குக்காகப் படிப்பதில்லை. மிக அத்தியாவசியமான ஒரு நோக்கத்திற்காக அந்தக் குறிப்புகளிலிருந்து தொழில்  ரீதியாகப் பெறப் போகும் ஒவ்வொரு பைசாவிற்காகவும் ஒரு வழக்கறிஞர் எப்படிப் படிக்க வேண்டுமோ அப்படிப் படித்தேன். ஒருவேளை நீங்கள் பொழுதுபோக்கிற்காக ஒரு புத்தகத்தைப் படிப்பீர்களானால் அப்போது அக்கம் பக்கத்துத் தொந்திரவுகள் ஒரு பொருட்டல்ல. லாரன்ஸ் ஸ்டெர்ன் எழுதிய நாவலான ட்ரிஸ்ட்ராம் ஷாண்டியையோ அல்லது ஆர்.எல்.ஸ்டீவன்சனுடைய ட்ரெசர் ஐலன்டையோ ஒரு பூகம்பத்தின் நடுவில் கூட என்னால் படித்து ருசிக்க முடியுமென்றே நினைக்கிறேன். ஆனால்  கண்ணும் கருத்துமான ஒரு படிப்பின்போது உங்களுக்கு ஒரு அமைதியான சூழ்நிலை தேவைப்படும். அடுத்த ரயில் நிலையத்தில் இரண்டு நபர்கள் நானிருந்த பெட்டியில் ஏறியது முதல் மீதிப் பயணம் முழுவதிலும் அது எனக்குக் கிடைக்கவேயில்லை. அவர்களில் ஒருவன் தன்னை ஒரு முக்கியப் புள்ளியாக மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளும் விதத்தில் சப்தமாகத் தன்னுடைய நண்பனுடன் பேசிக்கொண்டே வந்தான். ஆங்கில எழுத்தாளர் ஹார்ன் டுக்கின் கதைகளில் ஒன்றை எனக்கு ஞாபகப் படுத்தக் கூடிய மனிதர்களில் அவனும்  ஒருவன். அதில் அவர் அதிகமாகப் பெருமையைப் பீற்றிக்கொள்ளும் ஒரு நபரை வீதியில் சந்திக்கும்போது, அவரை நிறுத்தி அவரிடம் “மன்னிக்கவேண்டும். ஆனால் நீங்கள் ஒரு முக்கியப் புள்ளியாக இருக்க வேண்டும்” என்பார். அந்த கனவான் ஒரு முக்கியப் புள்ளிதான். நான் என்னுடைய புத்தகத்தின் பிரிவுகளோடும் உட்பிரிவுகளோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கையில் அவருடைய குரல் பலத்த காற்றாய் மேலெழும். அவருடைய குடும்ப வரலாறு, போரில் அவரது மகன்களின் தீரச் செயல்கள், அரசியல் வாதிகளையும் தளபதிகளையும் பற்றிய அவரது விமர்சனங்கள் என்று விரிந்த அவரது குரல் என்னுடைய பணியைச் செய்வதற்கான என் எளிய முயற்சிகள் எல்லாவற்றையும் மூழ்கடித்துவிட்டது. நான் எனது நீலப்  புத்தகத்தை மூடிவைத்து விட்டு சன்னல் வழியே வெளியில் பார்த்தவாறே எல்லாவற்றையும் பொறுக்கமுடியாமல் கவனித்துக் கொண்டிருக்கையில் அவரின்  குரல் இப்படியான விசயாதாரங்களின்மேல்   இடிமுழக்கமிட்டது:”இப்போது பிரெஞ்சுக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்…? ஜெர்மானியர்கள் செய்த தவறு… பிரிட்டிஷ் பிரதமர் அஸ்கோய்த் …”. நீங்கள் இந்த விஷயத்தின் தன்மை எத்தகையது என்பதை அறிவீர்கள். நான் இவற்றையெல்லாம் முன்னமே கேள்விப் பட்டிருக்கிறேன். அதிலும் பலமுறை. அது ஒரு கர்ண கடூரமான இசைக்கருவி பழையதும் விருப்பமற்றதுமான பாடலை அழுவது போலிருந்தது.

நான் தைரியமாய் அவனைப் பார்த்து கொஞ்சம் மெதுவான குரலில் பேசினால் நல்லது என்று சொன்னால் அவன் என்னை ஒரு கொடூரமான மனிதன் என்று நினைத்துக் கொள்வான். அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர அதைவிடச் சிறந்ததாகச் செய்வதற்கு அங்கிருந்த எவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை.அவனது அறிவின் விசாலத்திளிருந்து பிரகாசித்த ஒளியில் பயணித்த அனுபவத்திற்காக எல்லோருமே அவனுக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்ற திருப்தியோடுதான் அவன் இறங்கிச் சென்றிருப்பான் என்பதில் துளியும் எனக்குச் சந்தேகமில்லை. அவன் ஒரு நல்ல குறிக்கோளுள்ள மனிதன்  என்பது வெளிப்படையானது. அவனது தவறு என்னவென்றால் அவனுக்கு சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லை. அவன் சேர்ந்திருக்கத்  தகுந்தவன் அல்ல.

அமைதியான  எளிய மக்களின் உரிமைகள் சிறிய தேசிய இனங்களின் உரிமைகளைப் போல அதி முக்கியமாய்ப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றே நான் நம்புகிறேன். சில வாகன ஓட்டிகள் வேண்டுமென்றே பயமுறுத்தும் வகையில் ஒலிகளை எழுப்பும்போது நடுநிலை நாடான பெல்ஜியத்தை தனது ஆக்கிரமிப்பின் கால்களின் கீழே ஒரு பூச்சியைப் போல நசுக்கிப் போட ஜெர்மனி நுழைந்தபோது நான் எப்படிக் கொதித்துப் போனேனோ அப்படிக்  கொதித்துப் போகிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அன்புக்குரிய அய்யாவே, எந்த உரிமையில் நமது நெடுஞ்சாலைகளில் உங்கள் பாதையில் குறுக்கிடும் எல்லோர் மேலும் இந்த அருவருப்பான சாபத்தைக் திணிக்கிறீர். நீங்கள் விலகிச் செல்ல முடியாதா? நீங்கள் என்ன அவ்வளவு முக்கியமான புள்ளியா? அல்லது ஜெர்மன் நாட்டின் அராஜகவாத தீர்க்கதரிசியான நீட்ஷேவின் வெறிபிடித்த பிரச்சாரகரா? ஒருவன் தான் பிரஷ்யாவின் ஆன்மாவாக முடிசூட்டிக் கொண்டிருப்பதை உணராமல் குரூரமாகவும், வெட்கமில்லாமலும், அறமற்றவிதத்திலும் ஒரு பன்றியின் முதுகில் அமர்ந்திருக்க முடியுமென்றால் அவன் எத்தகையவன் என்று நான் அதிசயிக்கிறேன். ஒரு நாகரீகமடைந்த உலகில் அவலட்சனத்தின் வெளிப்பாடு.

பிறர் கவனத்தை அதிகமதிகமாய் ஆக்கிரமிக்கும் அளவிலான ஒலியெழுப்பும் ஒரு கிராமபோன் பெட்டியை வாங்கி வந்து ஒருவன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தன்வீட்டு சன்னல்களைத் திறந்துவைத்து அதை ஓட விட்டு முதல் உலக யுத்தத்தின்போது போர்வீரர்கள் பாடிய ‘கீப் தி ஹோம் பயர்ஸ் பர்னிங்’ என்ற பாடலால்  அல்லது அதைப் போன்ற வேறு ஒரு புளித்துப்போன பாடலால் வீதியை நிரப்பும் அந்த  மனிதனைப் போல மிகவும் தொந்தரவற்ற ஒரு மனிதன் வேறு எவரும் இருக்க முடியுமா? இது போன்ற சமூக நடவடிக்கைகளின் சரியான எல்லை எது? மீண்டும் அந்த ட்ராம்போனையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

ஆங்கிலக்  கட்டுரையாளரும் விமர்சகருமான வில்லியம் ஹஸ்லிட் சொன்னார் அந்தப் பயங்கரமான வாத்தியத்தைப் பழக  ஒருவன் விரும்பினால், அக்கம் பக்கத்தவருக்கு அது ஒரு தொந்திரவாக இருந்தாலும், அதை அவன் வீட்டிலேயே கூட கற்றுக் கொள்ள உரிமை பெற்றிருக்கிறான். ஆனால் அந்தத் தொந்திரவை ஆகக் கூடிய அளவிற்குக் குறைத்துக் கொள்வது அவனுடைய பொறுப்பு. அதை அவன் தனது வீட்டின் சன்னல்களைச் சாத்திவிட்டுப் பரணில் உட்கார்ந்து பழக வேண்டும். அவனது வீட்டின் முன்னறையில் உட்கார்ந்து பழகவோ, சன்னல்களைத் திறந்து வைத்திருக்கவோ, அதிக பட்ச வன்முறையாக பக்கத்து குடித்தனக்காரர்களின் காதுகளில் ஊதவோ அவனுக்கு  எந்த உரிமையும் இல்லை. அதே போன்றுதான் கிராமபோன் விசயத்திலும். நீங்கள் கிராமபோனை விரும்பினால், அதை நீங்கள் வைத்துக்கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதன் சத்தத்தின் அளவை உங்கள் வீட்டுக்குள் மட்டும் கேட்கும்படியாகக் குறைத்துக்கொள்ள உங்களால் முடியாவிட்டால் நீங்கள் அண்டை வீட்டாரின் சுதந்திரத்தில் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் அண்டை வீட்டார் ஒருவேளை ‘கீப்  தி ஹோம் பயர்ஸ் பர்னிங்’ பாடலை விரும்பாமல் இருக்கலாம். அவர்கள் தங்கள் ஞாயிறு பிற்பகலைத் தொந்திரவின்றிக் கழிக்க விரும்பியிருக்கலாம். நீங்கள் தெரிந்தே அவர்கள் விரும்புகிற அமைதியின் வழியில் இடையூறு செய்வது அனுமதியின்றி அவர்களுடைய  தோட்டத்திற்குள் நுழைந்து அவர்களின் பூச்செடிகளை உங்கள் கால்களால் நசுக்கி அழிப்பதைப் போன்ற மிகப் பெரிய வன்முறையாகும்.

தனிமனித சுதந்திரங்களின் மோதல்கள் சமரச முயற்சிகளுக்கு சவால் விடும்படி ஆகிவிட்ட எத்தனையோ வழக்குகள் இருக்கின்றன. லண்டன் நகரின் செல்வந்தர்களும் நவநாகரீக மனிதர்களும் வாழக்கூடிய வெஸ்ட் எண்டு சதுக்கத்தில் வசித்து வந்த எனது பழைய நண்பர் எக்ஸ் அதிசயிக்கத்தக்க விதத்தில் நற்பண்புகளும் கூடவே எரிச்சலும் கலந்த ஒரு கலவை. தெருப் பியானோ இசைக் கருவி வாசிக்கும் சப்தம் கேட்டால் பொறுமையிழந்து விடுவார். அதை அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்த விரைந்தோடுவார். அருகிலேயே தார்மீக அறநெறிகளின் பால் நீக்குப் போக்கான அணுகுமுறை கொண்ட அதேவேளையில் பலராலும் விரும்பப்பட்ட ஒரு பெண்மணி  இருந்தார். அவருக்குத் தெருப் பியானோ இசையென்றால் கொள்ளை ஆசை. ஒரு பழக்கூழ் கோப்பையை குழவிகள் மொய்ப்பதைப் போல மொய்த்து விடுவார். இதில் யாருடைய சுதந்திரம் யாருக்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டும். என் வாழ்வில் என்னால் சொல்ல முடியாது. தெருப் பியானோ இசைக்கருவி எவ்வளவாக விரும்பப் படுகிறதோ அந்த அளவுக்கு அது வெறுக்கப் படுவதும் நியாயமானதுதான். இத்தகைய அழகான புதிர்களுக்கு விடையை செர்வாண்டிஸ் எழுதிய அங்கதப் படைப்பின் கதாநாயகன் டான் குவிக்சாட்டின் எடுபிடி  சான்சோ பான்ஜாவிடமே கேட்பதற்கு மிகவும் விரும்புவேன்.

ஒரு உண்மையைச் சொல்கிறேன். இந்த சிக்கலான உலகில் நாம் முழு அளவில் ஒரு அனார்கிஸ்டாகவோ அல்லது முழு அளவில் ஒரு சோசலிஸ்டாகவோ இருக்க முடியாது. நியாயமான அளவுக்கு இரண்டும் கலந்த கலவையாகவே இருக்கவேண்டும். நமக்குப் பாதுகாப்பதற்கு இரண்டு விதமான சுதந்திரங்களும் இருக்கின்றன – நமது தனி மனித சுதந்திரம் மற்றும் நமது சமூக சுதந்திரம். ஒருபுறம் எதேச்சதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும் மறுபுறம் அராஜகவாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்  வேண்டியவர்களாக  இருக்கிறோம். நான் ஒரு மார்க்சியவாதியோ அல்லது டால்ஸ்டாயனோ இல்லை. இரண்டும் கலந்த சமரசம். என்னுடைய குழந்தை கண்டிப்பாக இந்தப் பள்ளிக்குத்தான் செல்லவேண்டும் அல்லது அந்தப் பள்ளிக்குத் தான் செல்லவேண்டும் என்றோ, அறிவியல் பாடம்தான் படிக்கவேண்டும் அல்லது கலைப் பிரிவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றோ, ரக்கர் என்ற கைப்பந்து விளையாட்டைத்தான் விளையாடவேண்டும் அல்லது கால்பந்துதான் விளையாட வேண்டும் என்றோ எந்த ஒரு அதிகார வர்க்கப் பிரதிநிதியும் சொல்வதை நான் அனுமதிக்க முடியாது.இவையெல்லாம் தனிமனித விருப்பு சார்ந்தவை. ஆனால் அதற்காக நான் என் குழந்தையை படிக்க வைக்க முடியாது என்றோ, காட்டுமிராண்டியாகத்தான் வளர்ப்பேன் என்றோ அல்லது புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் வரும் பாகின் பள்ளிக்கூடம் போல் பிக் பாக்கெட் திருடனாகக் கற்றுக் கொடுப்பேன் என்றோ நான் சொல்வேனானால் சமூகம் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காட்டுமிராண்டி வாழ்க்கை தற்காலத்திற்குப் பொருத்தமற்றது என்று சொல்லவும், பிக் பாக்கெட் திருட்டுக்குக் கடும் எதிர்ப்புத்  தெரிவிக்கவும், எனது குழந்தை அடிப்படைக் கல்வி பெற்றிருப்பது அவசியம் என்று வலியுறுத்தவும் செய்யும். எனது குழந்தை அண்டை அயலாருக்குத் தொந்திரவாக இருக்கவோ அல்லது சமுதாயத்திற்குச் சுமையாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும்படியாகவோ வளர்ப்பதற்கு எனக்கு சுதந்திரம் இருக்க முடியாது.

இப்படிச் சின்னச் சின்ன நடத்தை சார்ந்த விசயங்களில், சாலை விதிகளை மதித்து நடப்பதில் நம்மை நாமே நியாயம் தீர்த்துக் கொண்டு நாம் நாகரீகமானவரா அல்லது அநாகரீகமானவரா என்பதை அறிவிக்கிறோம். சாகசங்களும் தியாகங்களும் புரிவதற்கான அற்புதமான காலங்கள் அரிதானவை. பொது வெளியில் சமூக உறவுகளில் நம்மிடம் வெளிப்படும் சின்னச் சின்னப் பழக்க வழக்கங்கள் நமது வாழ்வில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதோடு நமது வாழ்க்கைப் பயணத்தை இனிப்பாகவோ கசப்பாகவோ ஆக்குகின்றன. ரயில் பெட்டியில் உடன் பயணித்த அந்த நண்பர் இதைப் பிரதிபலிப்பார் என்று நம்புகிறேன். அவருடைய அடுத்தவருக்கு எங்கே பிரெஞ்சுக்காரர்கள் தவறிழைத்தார்கள் என்பதையும், எங்கே ஜெர்மானியர்கள் தவறாகிப் போனார்கள் என்பதையும் விளக்கிச் சொல்வதை அவர் நிறுத்தத் தேவையில்லை. ஆனால் அது என்னுடைய நீலப் புத்தகத்தை நான் தொந்திரவில்லாமல் வாசிக்க அனுமதிக்கும் விதத்தில்.

 

(நிகரன், இதழ்-9, பக்கங்கள்-25,26,27,28,29)