சுதந்திரம் பொதுவானதா?

lenin ni9

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது  சுதந்திரம், சமத்துவத்தைப் பற்றிய ஆர்ப்பாட்டமான சொற்றொடர்கள், கம்பீரமான வார்த்தைகள், தாராளமான வாக்குறுதிகள், பகட்டோசையுடைய கோஷங்களின் ஜனநாயகமாகும். ஆனால் நடைமுறையில், இவையெல்லாம், மாதர்களுக்கு சுதந்திரம் இல்லாமையையும், அசமத்துவம் இருப்பதையும், உழைப்பாளி மக்களுக்கும், சுரண்டப்பட்ட மக்களுக்கும் சுதந்திரமின்மையும், சமத்துவமின்மையும் நிலவுவதையும் திரையிட்டு மறைக்கிறது.

………. …………………. …. …. …. ….. ….. ….. ……

இந்த வஞ்சனையான பொய்மை ஒழிக! ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குகிறவர்களுக்குமிடையில், சுரண்டப்பட்டவர்களுக்கும், சுரண்டுகிறவர்களுக்குமிடையில் எவ்வித “சமத்துவமும்” இல்லை, இருக்கவும் முடியாது. சட்ட பூர்வமான சலுகைகள் ஆண்களுக்கு ஆதரவாக இருப்பதின் காரணமாக மாதர்கள் பாதிக்கப்பட்டுள்ள வரையில் உண்மையான “சுதந்திரம்” இல்லை, இருக்காது, இருக்க முடியாது. மூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்து தொழிலாளி சுதந்திரம் பெறும் வரையில், முதலாளி, நிலப்பிரபு, வியாபாரி ஆகியோரின் ஆதிக்கத்தின் கீழிருந்து உழைக்கும் விவசாயி சுதந்திரம் பெறும் வரையில் உண்மையான “சுதந்திரம்” இல்லை, இருக்காது, இருக்கவும் முடியாது.

பொய்யர்களும் பாசாங்குக்காரர்களும் முட்டாள்களும் குருடர்களும் முதலாளிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் பொதுவான சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் பேசி மக்களை ஏமாற்ற முயலட்டும்.

தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நாம் கூறுவோம்: இந்தப் பொய்யர்களின் முகமூடியைக் கிழியுங்கள், இந்தக் குருடர்களின் கண்களை திறவுங்கள். அவர்களைக் கேளுங்கள்:

எந்தப் பாலினத்துக்கு எந்தப் பாலினத்துடன் சமத்துவம் உள்ளது?

எந்தத் தேசிய இனத்திற்கு எந்தத் தேசிய இனத்துடன் சமத்துவம் உள்ளது?

எந்த வர்க்கத்திற்கு எந்த வர்க்கத்துடன் சமத்துவம் உள்ளது?

எந்த ஆதிக்கத்தின் கீழிருந்து, அல்லது எந்த வர்க்கத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்து சுதந்திரம்? எந்த வர்க்கத்திற்கு சுதந்திரம்?

இந்தப் பிரச்சினைகளை முன்வைக்காமல், அவைகளுக்கு முதலிடம் கொடுக்காமல், இந்தப் பிரச்சினைகளைப் பற்றி வாய் மூடி மௌனியாயிருப்பதையும், மூடி மறைப்பதையும், முளை மழுங்கச் செய்வதையும் எதிர்த்துப் போராடாமல், அரசியல், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றிப் பேசுகின்றவர் உழைப்பாளி மக்களின் மோசமான விரோதியாவார்; ஆட்டுத் தோல் போர்த்த ஒநாயாவார்; தொழிலாளர், விவசாயிகளின் கடும் வைரியாவார்; நிலப் பிரபுக்கள், ஜார்கள், முதலாளிகளின் கைக்கூலியாவார்.

(சோவியத் ஆட்சியதிகாரமும் மாதர்களின் அந்தஸ்தும் என்ற பொருளில் பிராவ்தா இதழ்  249 ல், நவம்பர் 6, 1919ல்  வெளியான  தோழர் லெனின் அவர்களுடைய படைப்பின்  தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபகுதி)

(நிகரன், இதழ்-9, பக்கம்-18)