மார்க்சும் அற்பவாதமும்

marx ni 2

அற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும், போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது.
அவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தைத் தீவிரமாக வெறுப்பதற்கு தொடங்கியிருந்தார்.
மார்க்ஸ் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்தார். இந்த  வெறுப்பைப் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.
சுயதிருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில் – தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில் – எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.
தனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறமையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். அவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார்.
(ஹென்ரிஹ் வோல்கவ் எழுதிய ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலிலிருந்து)

(நிகரன், இதழ் 2, பக்கம் 17)

காரல் மார்க்ஸ்

marx ni1

மார்க்ஸின் தகப்பனார் இறந்த பிறகு மார்க்ஸுக்கும் இவனுடைய குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமலேயே போய்விட்டது. “குடும்பத்திற்குப் புறம்பானவனாகிவிட்டான் மார்க்ஸ்” என்று இவனுடைய தாயார் கூறிக்கொண்டு வந்தாள். இவனுடைய புது முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவந்தாள். அவள், தான் இறந்து போகிறவரை, தன் மகனுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. உதவி செய்யாமலிருந்ததோடு இவனுடைய பணக் கஷ்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியும் அடைந்தாள். ஐயோ, லட்சியவாதிகள் தங்கள் தாயாரின் கோபத்திற்கும் சாபத்திற்கும்கூட ஆளாக வேண்டியதிருக்கிறது.

வெ.சாமிநாதசர்மா,
நூல்: காரல் மார்க்ஸ்.

(நிகரன், இதழ் 1, பக்கம் 5)

இப்படிச் செய்ய எத்தனை பேரால் முடியும்?

gandhiji ni1

சத்திய சோதனை. மூன்றாம் பாகம். 12ஆம் அத்தியாயம். போயர் யுத்தத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரோடு சேர்ந்து மருத்துவ சேவை செய்து முடிந்தது. நேடாலில் பஞ்ச நிவாரணம் மற்றும் சுகாதார சேவைகள் செய்து முடிந்தது. இனி தென் ஆப்பிரிக்காவில் தான் இருந்தால் வெறுமனே பணம் பண்ணுவது ஒன்றே தன் பிரதான வேலை ஆகிவிடும் என்று பயந்தார் காந்தி. இந்தியாவுக்குத் திரும்புவதென்று முடிவு செய்கிறார். தென் ஆப்பிரிக்க இந்திய சமூகம் அவரை விடுவதாயில்லை. இறுதியில், தேவைப்பட்டால் ஒரு ஆண்டுக்குள் தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பத் தயார் என்ற நிபந்தனையோடு காந்தி இந்தியா திரும்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேடால் இந்தியர்கள் காந்தி குடும்பத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள். விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளி மற்றும் வைரத்திலான பொருட்கள், கடிகாரம், மோதிரம் என்று குவிந்துவிட்டன. கஸ்தூரிபா காந்தி அவர்களுக்கும் ஒரு விலையுயர்ந்த வைர நெக்லஸ் பரிசளிக்கப் பட்டது. இந்தப் பரிசுப் பொருட்களின் சுமை தாங்காமல் அன்று இரவு காந்தி அவர்களுக்கு தூக்கம் வரவில்லை. விலையுயர்ந்த அந்தப் பரிசுப் பொருட்களைத் தான் வைத்துக் கொள்வது தகாது என்று கருதினார். சேவைக்காக பணம் பெற்றால் அது சேவை ஆகாது என்பதும் பொது சேவையில் இருக்கும் ஒருவர் எளிமையாக வாழவேண்டும் என்பதும் அவர் கொள்கை. சேவை அதற்கேயுரிய வெகுமதியைப் பெறும் என்று நம்பினார். தனது குழந்தைகளும், மனைவியும்கூட இத்தகைய வாழ்க்கை முறைக்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். எனவே அந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம் ஒரு அறக்கட்டளையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் தென் ஆப்பிரிக்க இந்தியர் சமூகத்தின் செயல்பாடுகள் தடையின்றி நடக்க வழிசெய்வது என்று முடிவு செய்தார். ஆனால், கஸ்தூரிபா காந்தியிடம் இருந்து அந்த நெக்லஸைத் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. உணர்ச்சி மயமான போராட்டத்தில் குழந்தைகளைத் தனக்காகக் கஸ்தூரிபாவிடம் வழக்காடச் செய்தார். கஸ்தூரிபாவோவெனில் தனக்குப் பரிசளிக்கப்பட்ட நகையை காந்தி எப்படிக் கேட்கலாம் என்று வாதிட்டார். காந்தியோ அது தனது சேவைக்காகவே கஸ்தூரிபாவுக்குக் கொடுக்கப்பட்டது என்று விளக்கினார். கடுமையான போராட்டத்தின் இறுதியில் காந்தி வெற்றிபெற்றார். பரிசுப் பொருட்கள் எல்லாம் வங்கிக்குப் போனது டிரஸ்ட் பெயரில் டெபாசிட்டாக.

(நிகரன், இதழ் 1, பக்கம் 12)

‘அழிவின் தத்துவம்’ நூல் குறித்து.

.v ponnuchchaamy ni8

வேலாயுதம் பொன்னுச்சாமி.

மனிதர்கள் சமுதாயத்திற்கு வெளியில் இல்லை. சமுதாயம் மனிதர்களை சமூக மனிதனாக்குகிறது. அதேபோல, மனிதர்களும் சமுதாயத்தை உருவாக்குகிறார்கள். சமுதாயம் சமூக உறவுகளால் கட்டமைக்கப்பட்டது.       (அப்பா- மகள், மனைவி-கணவன், முதலாளி-தொழிலாளி, மருத்துவர்-நோயாளி). மனிதர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள சமூக உறவை உணர்ந்து கொள்வதற்கு அவர்களது நம்பிக்கைகள், சிந்தனை முறைகள், மொழி, புலன் உணர்வுகள் உதவி செய்கின்றன. இவற்றின் துணை கொண்டு தங்களுக்கான கருத்து நிலையை மனிதர்கள் உருவாக்குகின்றனர். இதில் அரசியல், பொருளாதாரம், சமூகவியல் பிரதான பங்கு வகிக்கின்றன. கருத்து நிலை என்பது கொள்கை, கோட்பாடு என்று இரு வகைகளாக சுட்டப்படுகின்றது. அப்படி என்றால் கொள்கை என்பது எது? கோட்பாடு என்பது எது என்ற வரையறை நமக்குத் தேவைப்படுகிறது.

கொள்கை என்பது ஒருவரால் ஏற்றுக் கொள்ளப்படும் எண்ணக்கருத்துக்கள், அபிப்பிராயங்கள் என்று சொல்லலாம். தனி மனிதனின் நோக்கு நிலை, சமூகத்தின் பொது மதிப்பீட்டுகள் ஆகியவை கொள்கை என வரையறுக்கப் படுகின்றன.

சமுதாயத்தில் பல பல அறிவுத்துறைகள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இவ்வறிவுத் துறையின் பார்வையில் உதாரணமாக மொழியியல், உளவியல், தொன்மவியல், இனவரைவியல், அமைப்பியல், பின் அமைப்பியல், யதார்த்தவாதம்- இப்படியான கருத்துநிலைகள் கொண்டு விளக்க முயல்வது கோட்பாடுகள் ஆகின்றன. சமூகப் பிரச்சினையை இனங்காணவும் அதைத் தீர்ப்பதற்குமான வழிகளாகவும், குறிப்புகளாகவும் இக்கொள்கைகளும் கோட்பாட்டுப் பார்வையும் நமக்கு உதவுகின்றன.

எஸ்.என்.நாகராஜன் என்ற மரபியல் ஆய்வரிஞரின் அழிவின் தத்துவம் என்ற நூல் இன்று அதிகம் உரையாடலுக்கு உட்படுத்தப்படும், சூழலியம் குறித்து அன்றே பேசப்பட்ட புத்தகம் ஆகும். விஞ்ஞான வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் கேடுகள் எப்படி சில வகைப்பட்ட கொள்கைகளால், கோட்பாடுகளால் நிலைப்படுத்தப்பட்ட கூறுகளைக் கொண்டிருந்தன என்பதைக் கட்டுட்டைத்துக் காட்டுகிறார் எஸ்.என்.நாகராஜன். இப்படித்தான் யூத மதத்தில்(ஜியானிசம்) கூறப்படும் கொள்கை ஒன்று யார் வேதநூல்களை (ஜெட் அவெஸ்டா) ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகினை இறைவன் வழங்கியுள்ளார் என்கிறது. அப்படி என்றால் யூத மதத்தை ஏற்காதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை என்பது சொல்லப்படாத கருத்தாகிறது. ஏற்காதவர்களை அழித்தொழிக்கலாம்,

அடிமை கொள்ளலாம். இறைவனுக்குப் பிரியமான யூதர்கள் சிறப்புரிமை பெற்ற இனம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இறைவனால் சிறப்புரிமை பெற்றவர்கள் என்பது நவீன காலத்தில் தொழில் நுட்பத்தால் சிறப்புரிமை பெற்றவர்கள் என்று மாறி இருக்கிறது.

விஞ்ஞானம் மனிதனுக்கு சேவை செய்யும், ஒய்வு நேரத்தைத் தரும் என்ற நோக்கு நிலை எவ்வளவு தூரம் பொய் ஆகியுள்ளது. அதற்காக விஞ்ஞானம் கூடாது என்பதல்ல. அது வரையறுக்கப்பட்ட தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதே எஸ்.என்.நாகராஜனின் கருத்தாகும். ஒரு பொத்தானின் தொடுகையில் உலகம் இருக்குமா? இல்லாமல் போகுமா? என்ற நிலையில் உலகம் நிறுத்தப் பட்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் பேரவலத்தை இரண்டு உலகப் போர்கள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன. விலங்கினங்கள் ஒன்றை ஒன்று அழித்து உண்டுதான் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக் கொள்கின்றன. வலு உள்ளது வாழும் என்ற டார்வினின் நோக்கு நிலை பாசிச சிந்தனைக்கும், வன்முறையை சரி என்று சொல்வதற்கும், சுரண்டலே நியாயம் என்றும் தவிர்க்க முடியாதது என்ற சிந்தனைக்கும் சாதாரண மனிதர்களை இட்டுச் செல்லும். விலங்குகள் மற்றதை அழித்துதான் வாழ்கின்றன என்ற நோக்கு நிலை மற்றவர்களைத் திட்டமிட்டு ஒழிக்கும் மனிதச் செயலை மறைக்கிறது. விலங்குகளிடம் திட்டமிட்ட செயல் இல்லை. உண்மையில் உயிர்களிடத்தில் போட்டியைக் காட்டிலும் ஒத்திசைவே அதிகம் உள்ளது ( புலி அடித்துத் தின்ற மாடு எப்படி பிற உயிர்களுக்கு உணவாகிறது) வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும்போது எளியது கீழ்ப்படிந்தே ஆகவேண்டும் என்பதை நியாயப்படுத்தலில் முடியும். வெல்லற்கரியதாக இருந்த டினோசார்களும், அரக்க ஆமைகளான அம்மோனபைட்டுகளும், மிகப் பெரிய யானைகளாகக் கருதப்பட்ட கம்பளி யானைகளும் இன்று இல்லாதொழிந்தது எதைக் காட்டுகிறது. இயற்கையில் உள்ள முரண்பாடு ஒருபோதும் ஆதிக்கத் தன்மையையோ, பகைத்தன்மையையோ பெறுவதில்லை. இயற்கையின் ஒத்திசைவை அளவுக்கு மீறி  நாம் கெடுத்தால் முரண்பாடு பெரும் வெடிப்பாக கிளம்பி அதன் முதல் பலி மனிதனாகவே இருக்கும். மனிதன் இயற்கையின் எஜமானன் என்பது ஆதிக்கக் கருத்தாகும். மனிதன் இப்பூவுலகின் தலைமகன், அவன் அனைத்தையும் அடிமைப்படுத்தலாம், வெல்லலாம் என்ற கருத்தை உட்பொதிந்துள்ளது. ஒன்றை அடிமைப்படுத்திதான் ஒன்று எஜமானன் ஆகமுடியும் என்ற தர்க்கத்துக்கு இது இட்டுச் செல்லும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம்தான், எஜமானன் அல்ல. இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.

உற்பத்திப் பெருக்கம் காரணமாக மனித வாழ்வில் இன்பமும் சுதந்திரமும் கூடும் என்ற கோட்பாடானது இயற்கை அழிக்கப்படுவதை மறைக்கிறது. உற்பத்திப் பெருக்கத்திற்கு இயற்கை வளங்கள் அழிக்கப் படுகின்ற சூழலில் மாசு ஏற்படுகின்றது. மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையாவதற்கும், நுகர்வுக் கலாசாரத்திற்கும் இட்டுச் செல்கிறது. (fan, mixy, fridge, grinder) மெய் நிகர் உண்மைக்கு அதாவது வர்ச்சுவல் ரியாலிட்டிக்கு அடிமையாகியுள்ளான் மனிதன். பேராசையையும், நிராசையையும், மன உளைச்சலையும், புதிய நரம்பியல் நோய்களையும் உற்பத்திப் பெருக்கம் உருவாக்கியுள்ளது. நுகர்வு மனித மதிப்புகளைச் சிதைத்துள்ளது. பணம், அதிகாரம், நவீன பொருட்கள் உள்ளவனே அந்தஸ்தானவன் என்றானது. உள்ள வருவாய் போதும் என்று வாழ்வதும், படிப்பதும், ரசிப்பதும் அந்தஸ்து இல்லாமல் போனது. அதிகாரம் இல்லாது வாழ்வது என்ற அமைதியான வாழ்வு வாழத் தகுதியற்ற வாழ்வாக, கிண்டலுக்கான வாழ்வாகப்

பார்க்கப்படும் மனோவக்கிரம் வளர்ந்துள்ளது. உற்பத்திப் பெருக்கம் இருப்பவன், இல்லாதவன் இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது. பிளவுபடாத சுதந்திரத்தைக் கானல் நீராக்கியுள்ளது. சுதந்திரம் என்பது பிளவுபடாதது. இருப்பவன் இல்லாதவன் பிளவு இருக்கும் வரை சுதந்திரமும் பிளவுபட்டதாகவே இருக்கும். இருப்பவனின் சுதந்திரம் இல்லாதவனை அடக்குவதாகவும், இல்லாதவனின் சுதந்திரம் இருப்பவனின் செயலில் தலையிடுவதாகவும் இருக்கும். உற்பத்திப் பெருக்கம் இம் முரணை அதிகப் படுத்தவே செய்யும்.

இன்று உலகம், வளர்ச்சிÏவாழ்வாதாரம் என்ற கூர் முரணில், லட்சம் பேர் நன்றாக வாழ ஆயிரம்பேர் அழிவது தவிர்க்க முடியாதது என்ற மனிதாபிமானமற்ற, ஆதிக்க கருத்து நிலையில், நவீனத்துவம் என்ற பெயரால் மானுடத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தி இருக்கிறது. இதற்கு ஒரே மீட்சி எளிய வாழ்க்கை, வரையறுக்கப்பட்ட விஞ்ஞானம். இதையே தன் புத்தகம் முழுவதும் மானுட அக்கறை கொண்டு எழுதுகிறார் எஸ்.என்.நாகராஜன். நவீன அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் முழுமையான திறனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார். காலமும், இயற்கையும் கை ஏந்தி நிற்கிறது, நவீன அறிவியலைத் திறனாய்வு செய்ய வேண்டிய செயல்பாட்டைக் கோரி.

(நிகரன், இதழ்-8, பக்கங்கள்-16,17,18)

‘விடுதலைப் போராளி’ ஜி.இராமச்சந்திரன்

g.ramachandran ni9

go to site ‘விடுதலைப் போராளி’ ஜி.இராமச்சந்திரன் – நூலிலிருந்து ஒரு அத்தியாயம்.

cytotec no script 30.மதுரை மத்திய சிறையில்

( என்னைப் பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி)

இடம்: மதுரை மத்திய சிறை 9 ஆம் பிளாக்

(சுமார் 150 பேர்கள் மத்தியில் விமர்சனம்)

இவருக்கு சிவகங்கை, பரமக்குடி, திருப்பத்தூர் தாலுகாவில் வேலை செய்யும்படி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைவதற்கான அம்சங்கள் இவரிடத்தில் இல்லை. வெகு உற்சாகமாகவும், கிராமம் கிராமமாக 24 மணி நேரமும் சுற்றுவார். ஆனால் இது மிகச் சாதாரணமான வேலைதானென்றும் தோழர்கள் குறை சொல்வார்கள்.

குறை: இவர் ஒரு கருமியாய் இருக்கிறார் (சிவப்பி, பெரியநாச்சி)

கருமித்தனம் என்றால் என்ன?

நான் என் பிரதேசத்திலிருந்து செல்லும்போது ரூபாய் 10/-ம் ஒரு ஜதை வேஷ்டிகளும் எடுத்துச் சென்றேன். அச்சமயம் நான் வீட்டிற்கே செல்ல முடியாது. திருப்பத்தூர் தாலுகாவில் 15 தினங்கள் தங்கிவிட்டு சிவகங்கை தாலுகாவுக்கு வந்தேன்.சிவகங்கை தாலுகாவில் 2, 3 மாதங்கள் கழித்த பிறகு ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு  வருகிறது. அதை இங்கு குறிப்பிடுகிறேன்.

அச்சமயம் என் கையில் பணம் தீர்ந்து போயிற்று. பிரசுர விற்பனைப் பணத்தை கையாட வேண்டிய நிலையாயிருந்தது. அதில் ஒரு ரூபாய் வரை செலவழித்து விட்டேன். அதற்கு எனக்குப் பணம் கொடுக்கும் தோழர் கூடக் கோபித்துக் கொண்டார். என் வேஷ்டிகள் பூராவும் கிழிந்து கந்தலில் கந்தலாக இருந்தது. அத்துனியைத் தவிர வேறு வழியிலாமல் இரண்டு மாதம் ஓடியது. அச்சமயத்தில் ஒரு தோழர் வந்தார். அவர் பேஸ்ட், பிரஷ், மார்கோ சோப்பு, கண்ணாடி, சீப்பு, ஹேராயில், 5,6 ஜதை உடைகள் மற்றும் பல நாகரீக பாசன்களில் தேர்ந்ததாக கையில் ஒரு பெட்டியை ஒரு பையன் தூக்கி வர வந்து சேர்ந்தார். அவரிடம் ஒரு வேஷ்டியைக் கொடுத்து விட்டு வீட்டில் போய் வாங்கிக் கொள்ளும்படி யாசித்தேன். மறுத்துவிட்டார். என் மனம் புண்பட்டது. பிறகு கூலி விவசாயிகள் தாங்களாகத் தங்கள் கூலி நெல்லை விற்று எனக்கு ஒரு வேஷ்டியும் ஒரு துண்டும் ரூபாய் 5 க்கு வாங்கிக் கொடுத்தார்கள்.

எனக்காக என் வீட்டில் மாதம் ரூபாய் 15/- வீதம் என் தாயார் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பைசா கூட எனக்கு வந்து சேரவில்லை. அச்சமயம் வந்த அந்த நவநாகரீகத் தோழர் நான் பசியும் பட்டினியுமாக வேலை செய்வது தெரிந்தும், தன்னிடம் பணம் இருந்தும் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அல்வாவும், பிரியாணிகளும் பிளேட் கணக்கில் உள்ளே தள்ளி கொக்கோ பானங்களுடன் ஸ்னோவும், பேஸ்பவுடர்களுடன் வாழ்க்கை நடத்துவது என் கண் முன்னால் நடந்து கொண்டு தான் இருந்தது. அவ்விதமிருப்பது தான் வளர்ச்சிக்கு உதவும் வளர்ச்சிக்கான அம்சங்கள் போலும்?. அதை எங்கே நான் உணரப் போகிறேன்? மேற்கண்ட கோணத்தில் வளரும் அம்சம் என்னிடத்தில் இல்லை தான். அது என் கருமித்தனமாக இருக்கலாம். அது தான் என் கருமித்தனத்தின் அர்த்தம். அதன் பிறகு தையல் வேலை செய்யும் தோழர் ஒருவர் ட்ரவுசர் ஒன்று கொடுத்தார்.

எனக்குத் துணி கொடுக்க மறுத்த தோழர் என் வீட்டில் போய் வாங்கிய துணிகளில் சிலவற்றைத் தானே எடுத்துக் கொண்டார். அந்த ஊதாரித் தோழர் ஆற்றில் குளித்து விட்டு தன மார்கோ சோப்பை போட்டு விட்டு போய்விட்டார். அந்த சோப்பை பெண் தோழர்களும் நானும் உபயோகப் படுத்தினோம். நான் அடிக்கடி அப்பிரதேசத்திற்குச் சென்று தங்குவதும் உண்டு. நாக்குக்கு ருசியான ஆகாரங்களுக்கு ஆசை இருந்தது. என் நாக்கு அறுக்கப் பட்டிருக்கவில்லை. என் கருமித்தனம் என் தொண்டையைப் பிடித்து நெருக்கி அடைத்து சாப்பிட தடை செய்யவில்லை. ஆனால் என்னிடம் பணமில்லை – வறுமை.

நிகரன், இதழ்-9, பக்கங்கள்- 38,39)

வீரம் விளைந்தது

nikolai ostrovsky ni2

 

 

 

 

 

வீரம் விளைந்தது. எழுதியவர் நிகோலாய் ஒஸ்திரோவஸ்கி. ஆங்கிலத்தில் “ஹவ் தி ஸ்டீல் வாஸ் டெம்பர்டு”. ரஷ்யப் புரட்சியின் தொடர்ச்சியான உள்நாட்டுப் போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு லட்சிய இளைஞனின் கதை. கதையின் ஊடே வரும் இந்தப் புகழ்பெற்ற வரிகள் இந்தக் கதையின் சிறப்புக்குச் சான்று.

“வாழ்வு சகிக்க முடியாததாக ஆனபிறகும் எப்படி வாழ்வதென்பதைக் கற்றுக்கொள். உன் வாழ்வைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்.”

“மனிதனது மதிக்கமுடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவை தான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமை பெரும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ, வாழ்வுக்கு வெடி வைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

பாவெல் கர்ச்சாகின் ரஷ்ய இலக்கியம் படைத்துள்ள மிகச் சிறந்த கதாபாத்திரங்களுள் ஒன்று. எப்படி கர்ச்சாகினுடைய தனிச் சிறப்பான குணங்கள் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஊடாக வளர்ந்து முழுமை பெறுகின்றன என்பதோடு சோஷலிச லட்சியம் மிக உயர்ந்த வாழ்வியல் அறநெறிகளோடு பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளது என்பதையும் சித்தரிக்கும் நாவல்.

(நிகரன், இதழ்-2, பக்கம்-19)