சால்வடார் அலண்டே

ஒரு சிலி அனுபவம்.allende 1

லத்தீன் அமெரிக்காவில் சிலி நாட்டில் தேர்தல் மூலம் மக்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சீயவாதி தோழர் சால்வடார் அலண்டே ஆவார். இந்தத் தேர்வு முதலாளித்துவ உலகிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
தோழர் சால்வடார் அலண்டே சிலி நாட்டில் சாண்டியாகோ நகரில் 1908ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் பிறந்தார். தனது உயர்நிலைக் கல்வியை ‘வால்பரைசா’ நகரில் பயின்றார். பின்னர் சிலி பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வி பயின்று மருத்துவரானார். இளம் வயதிலே இத்தாலியப் புரட்சியாளர் ஒருவரின் தொடர்பால் புரட்சிகர எண்ணம் கொண்டவரானார். 1933ஆம் ஆண்டிலே தனது 25வது வயதிலே தனது தோழர்களுடன் இணைந்து ‘ சிலி சோஷலிஸ்ட் கட்சி’யை உருவாக்கினார். அரசியலில் திவிரமாக ஈடுபட்டார்.
சால்வடார் அலண்டே சிலியின் ஜனாதிபதி தேர்தலில் 1952,1958,1964 ஆகிய ஆண்டுகளில் நின்று தோல்வியடைந்தார். அலண்டேக்கு ஆரம்ப முதலே சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது சிலி கம்யூனிஸ்ட் கட்சி 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் உலகப் புகழ் பெற்ற கவிஞர்’ தோழர் ‘பாப்புலோ நெரூடா’வை நிறுத்த முடிவு செய்திருந்தது. இடதுசாரிகளின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக எல்லா இடதுசாரிகளின் கூட்டணி அமைப்பான மக்கள் ஐக்கிய முன்னணி தோழர் சால்வடார் அலண்டேயை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. அதன் முடிவின்படி கம்யூனிஸ்ட் கட்சி பாப்லோ நெரூடாவை வாபஸ் பெற்றது. பாப்லோ நெரூடா அலண்டேயின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
சிலிநாடு ஏறக்குறைய இரு நூறு ஆண்டுகாலம் பணக்கார வர்க்கங்களின் பிரதிநிதிகளால் பல்வேறு கட்சிகளால் ஆட்சி செய்யப்பட்டுவந்தது. மக்களுக்கு வறுமை மட்டுமல்ல சிறையும் குண்டாந்தடியும் துப்பாக்கி குண்டுகளும் தாராளமாகக் கிடைத்தன. இச்சூழ்நிலையில்தான் சிலியின் இடதுசாரிக்கட்சிகளின் சார்பாக தோழர் அலண்டே ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டார். சாண்டியாகோ நகர உழைக்கும் மக்கள், கோம்கியூபோ கல்கரிச்சுரங்கத் தொழிலாளிகள், பாலைவனத்தின் செப்புச்சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் மக்களின் பெருந்திரள் கூட்டம் உற்சாகமாக தேர்தலை ஒரு போர்க்களமாக நினைத்து அலண்டேயின் வெற்றியை உறுதிப் படுத்தியது. அலண்டே தேர்தலில் வெற்றிபெற்றார். தேர்தல்முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் சிலியில் நடந்தது முற்றிலும் ஒரு புரட்சியே. எல்லா இடங்களிலும் அதைப் பற்றிய சர்ச்சைகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றன. உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் பல்லைக் கடித்து உருமிக்கொண்டிருந்தனர். அலண்டேயின் வெற்றி அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை அதிர வைத்தது. அவரை ஆட்சியேறவிடாமல் தடுக்க சூழ்ச்சிகள் பல செய்யப்பட்டன. அதனை முறியடித்தவர் சிலியின் தரைப்படை சேனாதிபதி ‘ஜெனரல் ரெனே ஷ்னீடர்’ஆவார்.
தரைப்படை சேனாதிபதியை ஒழித்துக்கட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவு செய்தது. அதன்படி அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிங்கர் மூலம் சி ஐ ஏ இயக்குனர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ்க்கு வெற்றுக்காசோலையை அளித்தார் என ஆவணங்கள் கூறுகின்றன. சதிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் சிலி ராணுவத்தில் இருந்த ஜெனரல் ராபர்ட்டோ வயக்ஸ் என்பவரைப் பயன்படுத்தியது. சிலியின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஜெனரல் ‘ஜெனே ஷ்னீடர்’ கொல்லப்பட்டு ஆதிக்கவர்க்கம் பழியைத் தீர்த்துக்கொண்டது.
அலண்டேயின் புதிய ஆட்சி அரசியல்சட்டத்திற்குள்ளிருந்தவாறே சிலியின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுவது என்ற முடிவை எடுத்து அமுல்படுத்தத் தொடங்கியது. ஆட்சிக்கட்டிலேறிய அலண்டே மக்களின் ஆதரவுடன் சோசலிஸ திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தார். சிலியின் தேசியச் செல்வமான செப்புச்சுரங்கங்கள் அனைத்தும் அமெரிக்கக் கம்பெனிகளுக்குச் சொந்தமாயிருந்தன. அவைகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கினார். சுகாதாரம், கல்வியமைப்பு. ஆகியவைகளை மாற்றியமைத்தார்.
ஏழைச் சிலியில் செல்வம் மறு வினியோகம் செய்யும் போது ஏழைகளின் உணவு சத்துள்ளதாகவும்,நல்ல இருப்பிட வசதிகள் உடை வசதிகள் மேம்பட்டதாகவும் ஆகியது .சிறந்த இலக்கியப் படைப்புகள் ஆவணங்கள் புத்தகங்கள் குறைந்த விலையில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. உழைப்பாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது.
இம் மாறுதல்களின் போது பாதிக்கப்பட்ட சொத்துடைமை வர்க்கங்களும் அன்னிய அமெரிக்கக் கம்பெனிகளும் பெரும் சதித்திட்டங்களில் இறங்கின. அன்னியச் செப்புச்சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதையொட்டியே மோதல்கள் ஆரம்பமாயின. உலகமக்களின் அனுதாபம் சிலிக்கு ஆதரவாகத் திரும்பியது. இந்த முயற்சி சிலியின் சுயதேவைப் பூர்த்திக்கான கால்வைப்பு என்பதை உலகம் புரிந்துகொண்டது. சோஷலிசநாடுகள் இவருடைய கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. சோஷலிஸ்ட் கியூபா நல்ல உறவைப் பேணியது. அலண்டே 1972ல் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்தார். சிலியின் முன்னேற்றம் உலகிற்குக் கண்கூடாகத் தெரிந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சிலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த பல சதித்திட்டங்களைத் தீட்டியது. செப்புச் சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபின் அமெரிக்காவின் பழிவாங்கும் செயல் தீவீரமடைந்தது. வன்முறையாக உருக்கொண்டது. உள் நாட்டிலிருந்த கிருஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் அவர்களது கைப் பாவைகளாக மாறினர். இவர்கள் உணவுப் பண்டங்களை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டனர். செயற்கைப் பஞ்சத்தைஉருவாக்கினார்கள். துரோகிகளை வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டித்தீர்த்தது.

அமெரிக்கக் கைக்கூலி ஜெனரல் பினோசெட் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினான். அலண்டேயைச் சுட்டுக் கொன்றான். அவரது நண்பரும் அவருக்கு வலது கரமாகவும் திகழ்ந்த கவிஞர் தோழர் பாப்லோநெரூடாவும் இறந்தார். சிலியின் ராணுவம் தனது தாய் நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் இழைத்தது. ஜனநாயகம் தழைத்துக் கொண்டிருந்த சிலியில் அதன் தலைவர் சல்வடார் அலண்டேயைப் படுகொலை செய்து1973 செப்டம்பர் 11ம் நாள் ஆட்சியைக் கைப்பற்றினான் கொடுங்கோலன் ராணுவ வெறியன் பினோசெட். எதிர்த்துப் போராடிய மக்களைப் படுகொலை செய்தான். 30000ம் பேர் கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர். அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிலை நிறுத்தினான் பினோசெட்..
பல ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பின் வீழ்ந்தான் பினோசெட்.. இன்று லத்தீன் அமெரிக்காவில் பலநாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடதுசாரி அரசுகள் அமைந்துள்ளன. அவை இடதுசாரிப் பாதையில் வெற்றிநடை போடுகின்றன. உலகம் முழுவதும் சோஷலிசம் வெல்லும் என்பது நிச்சயம். அவை அலண்டே போன்ற உத்தமத் தோழர்களின் தியாகத்தால்தான் என்பது கண்கூடு.

கட்டுரையாளர்: தோழர் இரா. பாலச்சந்திரன்.
(நிகரன், இதழ் 7)