வெறி நாயும் ‘வெரிகுட்’ நாயும்

dr. santhil lal ni 8
ஹசிகோ (HACHIKO) என்னும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காக இந்தக் கதைச் சுருக்கம்.

ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு ஒரு நாய்க்குட்டி பார்சல் மூலம் அனுப்பப் படுகிறது. தொடர்வண்டி நிலையத்தில் அந்தக் குட்டி நாய் பார்சல் பெட்டியிலிருந்து வெளியே வந்து விடுகிறது. யார் யாருக்கு அனுப்பியது என்னும் துண்டுக் காகிதம் கிழிந்து, காணாமல் போய் விடுகிறது. தொடர்வண்டி நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.  அந்தக் குட்டி நாய், பலரது கால்களைப் பின் தொடர்ந்து போய் வந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை.

பயணி ஒருவரின் காலைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அவர் அதைப் பாசத்துடன் தூக்கி வைத்துக் கொள்கிறார். நிலைய அதிகாரியிடம் அந் நாய்க்குட்டியை ஒப்படைக்கிறார். அதன் விபரம் (யார் யாருக்கு அனுப்பியது) தெரியாததால், அதை அவரே வளர்க்கும்படியும், அக்குட்டியைத் தேடி யாரும் வரும்போது அதை அவர்களிடம் ஒப்படைக்கலாம் என்றும் நிலைய அதிகாரி  சொல்லிவிடுகிறார். ஆகவே, அந்தப் பயணி  அதை எடுத்துக்கொண்டு, தனது ஊருக்கு வந்து தனது ஊர் தொடர்வண்டி நிலைய அதிகாரியிடம் விபரம் கூறிவிட்டு, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்.

அவரது மனைவியும், மகளும் இந்த நாய்க்குட்டியை விரும்புகின்றனர்.  ஹசிகோ  என்று பெயர் சூட்டுகிறார்கள். அவர், குட்டியை மிகவும் அன்பாக வளர்த்து வருகிறார். அவர் தொடர் வண்டியில் ஏறி அடுத்த ஊருக்குப் பணி நிமித்தமாக தினமும் போய் வருகிறவர். அவர் தினமும் காலையில் தனது வீட்டிலிருந்து நடந்து தொடர்வண்டி நிலையம் வருவார். அதுவும் கூடவே வரும். வரும் வழியில் அவரது நண்பர்கள் இருவரைப் பார்த்துப் பேசுவார். ஒருவர் நடைபாதைக் கடையும், மற்றொருவர் ஒரு சிறு கடையும் வைத்திருப்பவர்கள். அது வாலாட்டிக் கொண்டு நிற்கும். அவர் தொடர்வண்டியில் ஏறிப் போனபின்பு அது வீடு திரும்பும். வழியில் அந்த இரு நண்பர்கள் ஏதாவது தீனி கொடுப்பார்கள். இது சாப்பிடும்.

ஹசிகோவுடன் அவரது குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அவரது மகளுக்குத் திருமணம் ஆகி வெளியூர் சென்று விடுகிறாள். ஒருநாள் அடுத்த ஊருக்குச் சென்ற அவருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள். அவரது மனைவி மருத்துவ மனையிலேயே இருக்க நேரிடுகிறது. ஹசிகோ தினமும் காலையில் தொடர் வண்டி நிலையம் செல்லும். மாலையில்அவர் வழக்கமாகத் திரும்பும் வண்டி வரும்வரை அங்கேயே இருக்கும். பின்னர் வழியில் நண்பர்கள் தரும் தீனியை சாப்பிட்டுவிட்டு வீட்டில் அவுட் ஹவுசில் படுத்துக் கொள்ளும். மருத்துவச் செலவு காரணமாக அந்த வீட்டை விற்று விடுகிறார்கள். நோய் வாய்ப்பட்ட அவர் ஒரு நாள் இறந்துவிடுகிறார். அவரது மனைவி, தன் மகள் வீட்டுக்குச் சென்று விடுகிறார்.

ஹசிகோ தொடர் வண்டி நிலையத்திலேயே தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தனது எஜமானரின் வருகைக்காக காத்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான குளிர் காலம். பனி கொட்டுகிறது. நடுங்கிக்கொண்டே காத்திருக்கின்றது. இவ்வாறு சில வருடங்கள் செல்கிறது. பின்னர் அதே தொடர் வண்டி நிலையத்தில் இறந்து விடுகிறது.

ஊர்மக்கள் ஹசிகோவுக்கு தொடர்வண்டி நிலைய வாசலில் அதன் சிலையை வைக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட அவரது மனைவி அவ்வூருக்கு வந்து ஹசிகோவின் சிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறாள்.

இது உண்மைக் கதை. ஹசிகோ வின் சிலை இப்போதும் ஜப்பான் – டோக்யோ – ஷிபுயா(SHIBUYA) ரயில் நிலையத்தில் இருக்கிறது.

மனிதனுக்கும் நாய்களுக்கும் உள்ள உறவு கற்காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. கற்கால மனிதன் முயல் போன்ற சிறு பிராணிகளை வேட்டையாடிக் கொண்டு வர நாயைப் பழக்கினான். மனிதன் தின்ற மிச்ச மீதி உணவை நாய்க்குப் போட்டான்.

அந்த பந்த பாசம் இன்றும் தொடர்கிறது. அமெரிக்காவில் அமெரிக்கர்கள் ‘வீட்டுக்கு ஒரு நாய்’ (சிலர் இரண்டு) வளர்க்கிறார்கள். அங்கு நாய் வளர்ப்பதற்கு சட்டங்கள் உண்டு. சட்டத்தை மீறினால் கடும் தண்டனை உண்டு. நாயுடன் நடைப் பயிற்சி செல்வோர் கையில் ஒரு நெகிழிப் பையும் கொண்டு செல்ல வேண்டும். வழியில் அது மலம் கழித்தால், அதை கையுறை அணிந்து நெகிழிப் பையில் அள்ளி எடுத்து அருகில் இதற்கென இருக்கும் பெட்டியில் போடவேண்டும்.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ரேபீஸ் என்னும் வெறி நாய்க்கடி  நோயை அறவே ஒழித்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தெருவோர இறைச்சிக்கடை முன்பாக ஒருசில நாய்களை நிச்சயமாகக் காண முடியும். ‘தெரு நாய்களைக் கொல்ல வேண்டும்’- என்று நடிகர் மோகன்லால் சில மாதங்கள் முன்பு கடுமையாகக் கூறி இருந்தார். அதற்கு, புளு கிராஸ் அமைப்பினரும் நடிகர் விஷாலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சில ஊர்களில் தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு குழந்தைகளைக் கடித்து விடும் செய்திகள் அடிக்கடி வருகின்றன. தெருநாய்கள் அனைத்துக்குமே வெறி நாய்க்கடி நோய் ரேபீஸ் இருப்பதில்லை. பொதுவாக நாய்கள் மனிதனைக் கடிப்பதில்லை. இன்றைய நாள் வரை ரேபீஸ் நோய் தாக்கிய மனிதரைக்காப்பாற்ற மருத்துவம் இல்லை. வளர்ப்பு நாயோ, தெரு நாயோ, அது கடித்துவிட்டால் ரேபீஸ் தடுப்பூசி கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும். முன்பு தொப்புளைச் சுற்றி 14  ஊசிகள் போடப்பட்டன. தற்போது கை புஜத்தில் 4 ஊசிகள் போட்டுக்கொண்டால் போதுமானது. நாய் வளர்ப்பவர்கள் நாய்க்கும் ரேபீஸ் தடுப்பூசி போடவேண்டும். தாங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

வட கொரியா, தென் கொரியா, சீனாவில் நாய்க்கறியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

நம்மூர் தெரு நாய்களை கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க முடியுமா? நாய்களைப் பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்யவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எந்த நகராட்சியும் இதை செய்வதாகத் தெரியவில்லை. இதைச் செய்வதால், நகராட்சி உறுப்பினருக்கு என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது? கழிப்பறை கட்டினாலோ, சாலை போட்டாலோ கணிசமான கமிஷன் கிடைக்கும்.

தெருவோர இறைச்சிக் கடைகளையே தடை செய்யவேண்டும். இறைச்சிக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, அவற்றை உரக் கிடங்குகளுக்கு அனுப்பவேண்டும்.

தெருவில் சுற்றித் திரியும் ஒருசில பசுக்களையே கட்டுப்படுத்த முடியாத அரசு, கூட்டங் கூட்டமாய்த் திரியும் நாய்களையா கட்டுப்படுத்திவிடப் போகிறது?

டாக்டர் ஆர்.எம்.ஆர்.சாந்திலால்
(நிகரன், இதழ் 8)

நாங்கள் வாழ்க்கையைக் கவுரவிக்கிறோம்

bagathsing ni2
“நாங்கள் மனித வாழ்வினை விவரிக்க இயலாத புனிதமானதாகக் கருதுகிறோம். மனிதத் தத்துவத்திற்கு சேவை செய்வதிலே மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதைக் காட்டிலும், எங்கள் உயிரை நாங்களே மாய்த்துக் கொள்வதை விரும்புவோம். நாங்கள் ஏகாதிபத்தியவாதிகளின் கூலிப் பட்டாளத்தைப் போன்றவர்களல்ல. அவர்களுக்கு ஈவிரக்கமின்றி மற்றவர்களைக் கொல்வதையே கற்பிக்கிறார்கள். நாங்கள் வாழ்க்கையைக் கவுரவிக்கிறோம். ஆன மட்டும் அதைப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம்.”
“புரட்சி உலகத்தின் விதி. அது மனிதகுல முன்னேற்றத்தின் அடிப்படை. ஆனால் அதற்கு ரத்தம் தோய்ந்த போராட்டம் தவிர்க்க முடியாததல்ல. தனிநபர் பலாத்காரத்திற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகளைக் கொண்ட சம்பிரதாயமல்ல. புரட்சியை எதிர்ப்பவர்கள் வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள், ரத்தக் களறி முதலியவைகளையே புரட்சி என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் புரட்சி இவற்றுக்குள்ளேயே அடங்கிவிடவில்லை. இவை புரட்சியின் சாதனங்கள் ஆகலாம். ஆனால் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் புரட்சியின் உண்மையான வலு, சமுதாயத்தைப் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மாற்ற வேண்டுமென்னும் மக்களின் தீவிரமான விருப்பமே இருக்கும். நம் காலத்திய நிலைமையில் சில தனி நபர்களைக் கொலை செய்வதே புரட்சியின் நோக்கமல்ல. மனிதனை மனிதன் சுரண்டிக் கொள்ளையடிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்து நம் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெறுவதே புரட்சியின் நோக்கமாகும்.”
பகத்சிங்
நூல்: விடுதலைப் பாதையில் பகத்சிங்.
(நிகரன், இதழ் 3, பக்கம் 19)

கவிதையும் கவிதை மனமும்

meeraan 2
[தக்கலை கவிதை முகாமில் சூபி கவிதை மொழி  என்ற தலைப்பில் எழுத்தாளர் மீரான் மைதீன் ஆற்றிய உரையின் சிறு பகுதி.]
முந்தைய கவிதை உலகம் அல்லது இப்ப இருக்கிற கவிதை உலகம் அல்லது வரப்போகிற கவிதை உலகம் அல்லது எழுத்துக்குப் பின்னாடி இருக்கிற அரசியல் இதையெல்லாம் தாண்டி கவிதை அப்படீன்னு சொல்லக்கூடியது ஒரு மனுஷனுக்கு உதிப்பாக வரும் அல்லது அவனுக்கு ஒரு  வலியாக வரும். இது என்னுடைய அசெஸ்மென்ட் . சமீபகாலமா நான் புரிஞ்சிகிட்ட   ஒரு விஷயம். அது அவனுக்குள்ளாகவே  தோன்றும். அல்லது யாருக்குள்ள எல்லாம் கவிதை தோன்றுதோ அவன்  எல்லாமே சூபியாக மாறுறான்.
ஆனா கவிதையும் கவிதை மனமும் ஒன்னல்ல. அத நாம நல்லா புரிஞ்சிக்கணும். லைலாவுடைய வீட்டுக்குப் போறதுக்கு மஜ்னு  குதிரையில ஏறுறான். மஜ்னுவுடைய நோக்கம் என்ன அப்படீன்னா லைலாவுடைய வீட்டுக்குப் போய்ச்  சேரணும்கிறது. குதிரையில ஏறுன மஜ்னு என்ன பண்றான்… மஜ்னுவுடைய மைன்ட் முழுவதும் லைலாதான் கெடக்குறா. எங்க பாத்தாலும் லைலாவாத் தெரிஞ்சிட்டே இருக்கு. குதிரை போயிட்டே இருக்கு. ஒரு குறிப்பிட்ட கட்டத்துல திடீர்னு அவன் குதிரையுடைய கடிவாளத்தைப் புடிச்சி நிறுத்திப் பாக்குறான் லைலாவுடைய வீடு தாண்டி குதிரை ரொம்ப தூரம் வந்திருச்சி. அப்பந்தான் மஜ்னுவுக்கு  ஒரு   உண்மை தெரியுது. நம்மதான் லைலாவக் காதலிக்கோம். குதிரை லைலாவக்  காதலிக்கலைன்னு. இதுதான் கவிதைங்கிறதும் கவிதை மனம் என்கிறதும்.
ஒரு கவிதை மனம் அப்படீன்னு சொல்றது மனம் முழுக்க லைலா நெறஞ்சு கெடக்குறது. ஆனா குதிரை அப்படீங்கிறதுதான் கவிதையாயிருக்கு. அதனால கவிதை மனமுள்ள எல்லாரும் கவிதை எழுதணும்னு அவசியம் கிடையாது. கவிதை மனம் அப்படீங்கிறது ஒரு கான்செப்ட்.. கவிதைங்கிறது அதில இருந்து  பிறந்து  வரக் கூடியது. அது சில நேரம்  லைலாவோட வீட்டுக்குள்ளும் போகும், சிலநேரம்  லைலாவுடைய வீடு தாண்டி நீண்ட தொலைவுக்கு அப்பாலும் போகும். ஆனா எங்க போய் நின்னாலும் மறைமுகமாக அதற்குள்ள லைலாதான்  இருப்பாள். இதுதான்  கவிதையுடைய மிக முக்கியமான விஷயமா நான் பாக்குறது. என்ன காரணம்னு சொன்னா.. மனசு.
என் வீட்டில எனக்கு இஷ்டமான ஒரு பூனை ..என்னுடைய செல்லமான ஒரு பூனை. அந்தப் பூனைக்கி ஏழு நாட்களுக்கு முன்னால  உடம்பு சரியில்லாம போயிருச்சி. அப்ப கடந்த சனிக்கிழமை  இரவோட இரவாக அதை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போயி ரெண்டு ஊசியப் போட்டு வீட்டுல வந்து போட்டாச்சு. அப்ப.. டாக்டர் பாத்தாரு. அந்தப் பூனைக்கி ஒன்னும் சொல்லத் தெரியாது. என்ன சாப்பிட்டது என்ன செய்யிது எதுவும் சொல்லத் தெரியாது. அதுக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும். திரும்பத் திரும்ப அப்படியே என்னுடைய கால்ல வந்து மொகத்தப் பொதச்சுக்கிட்டு அப்படியே விழுந்து கிடக்கத்தான் தெரியும். அப்பறம்  நான் அத விட்டுட்டேன். பெறகு திங்கட்கிழமை காலையில மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனேன். ரெண்டு ஊசி போட்டாச்சு. செவ்வாக்கிழமை கூட்டிட்டுப் போனேன் ரெண்டு ஊசி போட்டாச்சி. புதன்கிழமை கூட்டிட்டுப் போனேன் ரெண்டு ஊசி போட்டாச்சி. டாக்டர் புதன் கிழமை சொல்லிட்டாரு. இனி நீங்க ஊசி போடுறதுக்குக் கொண்டு வர வேண்டாம். அதுக்கு ஆகாரம் ஏதாவது குடுக்கிறதுக்கு முயற்சி பண்ணுங்க ..அப்படீன்னு. அப்ப இந்த பில்லர வச்சு  தண்ணி அப்புறம் இந்த எலெக்ட்ரோ பயால் பவுடர்  இதெல்லாம் கொடுக்கிறது. அப்ப வியாழக்கிழமை இரவு வந்து அது தண்ணி குடிச்சதுன்னா அந்தத் தண்ணிய வாமிட் பண்ண ஆரம்பிச்சுது. தண்ணி வந்து உடம்புல நிக்கல. வியாழக்கிழமை இரவு ஒரு பத்து மணிபோல  நான் ஒரு சேர் போட்டு வெளிய உட்கார்ந்திருந்தேன். அதுக்கு நடக்க முடியல. அப்படியே தத்தித் தத்தித் தத்தி என் கால் பக்கத்திலேயும் என் மனைவி கால் பக்கத்திலேயுமா ரெண்டு பேருக்கும் மத்தியில உக்காந்திருக்கு.  அப்ப நான் சொன்னேன். இத உள்ள கொண்டு போடணும். நாம உள்ள போனா இது வந்திரும். அப்படீன்னு சொல்லி நாங்க உள்ள போயிட்டோம். அப்ப அந்தப் பூனை அப்படியே  உள்ள வந்து அதுக்கே உள்ள ஒரு இடத்தில வந்து படுத்துக்கிடக்கு.
வெள்ளிக்கிழமை மத்தியானம்  என் பிள்ளைகள் ஓடி வந்து வாப்பா பூனை துடிச்சிக்கிட்டுக் கெடக்குன்னு சொல்லுறாங்க. என் மனைவி ஓடிப்போயி அதைத் தூக்குறா.  தூக்குன ஒடனே அதனோட ஒரு துடிப்பு. அவ அப்படியே அதக் கீழ வச்சிட்டா. இப்பம் அதோட உயிர் போகக்கூடிய ஒரு நேரம் அதோட ஒரு கால அப்படியே அடிக்குது. நான் இப்பம் அந்தப் பூனையோட தலைய அப்படியே தடவி தண்ணிய எடுத்து ஒரு டிராப் அது வாயில விடுறேன். அப்படியே அந்தப் பூனை இறந்துருது.
இறந்து போன ஒடனே குழந்தைகள்லாம் அழ ஆரம்பிச்சுட்டாங்க. நான் அப்படியே நிக்குறேன். ஒரு அஞ்சு நிமிசத்துக்கு. அப்ப  நான் என்ன பண்ணுனேன்னு கேட்டீங்கன்னா ஒரு அழகான துண்ட எடுத்து ஒரு வாஷிங்  டப் எடுத்து அதக் குளிப்பாட்டி ஒரு அழகான  வெள்ளைத் துணியில அதச் சுத்தி ஒரு குழியத் தோண்டி அதுல போட்டு மண்ணால மூடுனேன். குழந்தைங்க உட்கார்ந்து  அழுதுகிட்டே இருக்காங்க. அப்ப  குழந்தைகள சமாதானப் படுத்துறதுக்காக நான்  ஒரு வார்த்தை சொன்னேன். இந்தப் பூனையினுடைய கடவுளாக வாப்பா இருந்தேன். கடவுளாக இருக்கிறது என்கிற வார்த்தை. எனக்கு அதத் தவிர வேறு ஒன்னும் சொல்லத் தெரியல. இந்தப் பூனையோட  கடவுளாக நான் இருந்தேன்.
ஒரு கவிஞனுடைய மனம்னு சொல்லக்கூடியது.. ஞானம்.. ஞானத்தால் நிரம்பி இருக்கக் கூடியது. கவிதை என்பது வேறு கவிதை மனம் என்பது வேறு. கவிதை மனமுடையவர்களால் கவிதை செய்ய முடியும் ஆனால் எல்லாக் கவிதைக்குள்ளும் கவிதை மனம் இருக்குமா அப்படீன்னு சொல்ல முடியாது.
அப்போ ஏன் வந்து நான் அந்தப் பூனையினுடைய கடவுளாக இருந்தேன். அந்தப் பூனை எந்தப் பிரதி பலனையும் எனக்குச் செய்ய முடியாது. என் குழந்தைக்குச் சாப்பாடு கொடுக்கறேன்னா என் குழந்தை எப்பவாவது ஒருக்க எனக்கு திரும்ப சாப்பாடு போட முடியும். அந்தப் பூனை எந்த வகையிலும் எதையும் திரும்ப  எனக்குச் செய்ய முடியாது. ஒரு மனிதனுடைய காதல் ஒரு மடங்குன்னு சொன்னா கடவுளுடைய காதல் நூறு மடங்குன்னு சொல்லலாம்.  நூறு மடங்குக் காதலோடு அந்தப் பூனையோடு என்னால் நடந்துகொள்ள முடியுது.கவிதைக்கும் கவிதை எழுதுறவருக்குமான உறவு இப்படிப்பட்டது.

நேசத்தின் முகவரி

soo.sivaraman ni 9துள்ளத் துடிக்க உள்ளிழுத்துச் சென்று
அடித்து வீழ்த்தினான் அவனை
நேற்றிரவு
தெரு நிறைந்த கடைநடுவே
கைநீட்டி கேட்டதெல்லாம்
பரிசளித்த அதே கைகளால்தான்.
சொந்தமாய் நிற்கவும் நடக்கவும்
துவங்கிய கால்களின் திடத்தில்
கொஞ்சிக் குழாவி ப்ரியஞ்சொட்ட
கையேந்தி நின்றானவன்.
பெருஞ்சக்கரம் தரைபாவ
சின்னச் சக்கரங்கள் கால்பரப்பி சாய்ந்திருக்கும்
குட்டி சைக்கிளொன்றை கைப்பற்றிக் கொள்ளவென.
சற்றுமுன்..
சைக்கிளை வெளித்தள்ளி
எதிர்ப்பட்ட அப்பனிடமே விசாரித்தான்
போனவாரம் பாட்டியை விட்டுவந்த
‘டவுன் ஃஹோம்’முகவரியை.

சூ.சிவராமன்
(நிகரன், இதழ் 9, பக்கம் 4)

மார்க்சும் அற்பவாதமும்

marx ni 2

அற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும், போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது.
அவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தைத் தீவிரமாக வெறுப்பதற்கு தொடங்கியிருந்தார்.
மார்க்ஸ் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்தார். இந்த  வெறுப்பைப் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.
சுயதிருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில் – தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில் – எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.
தனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறமையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். அவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார்.
(ஹென்ரிஹ் வோல்கவ் எழுதிய ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலிலிருந்து)

(நிகரன், இதழ் 2, பக்கம் 17)

தந்தைக்குக் கடிதம்

bagathsing ni2

(1923ல் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் தீவிரமாகத் தன் மகனுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். இது பகத்சிங்கிற்குத் தெரிய வந்தபோது, அவர் மிகவும் அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்)

மதிப்பிற்குரிய தந்தைக்கு, வணக்கம். என் வாழ்க்கை ஏற்கெனவே ஓர் உன்னதமான இலட்சியத்திற்காக – இந்தியாவின் விடுதலைக்காக – அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே வாழ்க்கை வசதிகளும் உலக இன்பங்களும் எனக்கு வசீகரிக்கவில்லை. எனக்குப் புனித நூல் அணியும் வைபவத்தின்போது, நான் மிகவும் சிறுவனாக இருந்தபோது, பாபுஜி(தாத்தா), என்னை நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்பதாக சத்தியம் செய்ததை, தாங்கள் நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனவே, அவரது சத்தியத்திற்கு மதிப்பளிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் கீழ்ப்படிதலுள்ள,
பகத்சிங்.

(நிகரன், இதழ் 2. பக்கம் 9)

உரமானவர்கள்

gandhi ni 2

“சுதந்திரமடைந்த ஒவ்வொரு மண்ணின் சுபீட்சமும் அந்த சுதந்திரத்தை அடையப் போராடியவர்களை உரமாகக் கொண்டு பெற்ற சுபீட்சம்தான் என்பதை மறந்து விடலாகாது. சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத இயக்கங்கள், சுதந்திரமே வேண்டாமென்ற இயக்கங்கள் எல்லாம்கூட இன்று நமது சுதந்திரத்தின் பயனை அநுபவிக்கின்றன. அன்று சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் யாரோ, அவர்கள் மரித்து மண்ணடியிலே மக்கி, என்றோ உரமாகி விட்டார்கள். ஆனால் சுதந்திரம் இன்னும் இருக்கிறது.”

தீபம் நா.பார்த்தசாரதி,
‘ஆத்மாவின் ராகங்கள்’ நாவலின் முன்னுரையில்.

(நிகரன், இதழ் 2, பக்கம் 3)