வெறி நாயும் ‘வெரிகுட்’ நாயும்

dr. santhil lal ni 8
ஹசிகோ (HACHIKO) என்னும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காக இந்தக் கதைச் சுருக்கம்.

ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு ஒரு நாய்க்குட்டி பார்சல் மூலம் அனுப்பப் படுகிறது. தொடர்வண்டி நிலையத்தில் அந்தக் குட்டி நாய் பார்சல் பெட்டியிலிருந்து வெளியே வந்து விடுகிறது. யார் யாருக்கு அனுப்பியது என்னும் துண்டுக் காகிதம் கிழிந்து, காணாமல் போய் விடுகிறது. தொடர்வண்டி நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.  அந்தக் குட்டி நாய், பலரது கால்களைப் பின் தொடர்ந்து போய் வந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை.

பயணி ஒருவரின் காலைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அவர் அதைப் பாசத்துடன் தூக்கி வைத்துக் கொள்கிறார். நிலைய அதிகாரியிடம் அந் நாய்க்குட்டியை ஒப்படைக்கிறார். அதன் விபரம் (யார் யாருக்கு அனுப்பியது) தெரியாததால், அதை அவரே வளர்க்கும்படியும், அக்குட்டியைத் தேடி யாரும் வரும்போது அதை அவர்களிடம் ஒப்படைக்கலாம் என்றும் நிலைய அதிகாரி  சொல்லிவிடுகிறார். ஆகவே, அந்தப் பயணி  அதை எடுத்துக்கொண்டு, தனது ஊருக்கு வந்து தனது ஊர் தொடர்வண்டி நிலைய அதிகாரியிடம் விபரம் கூறிவிட்டு, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்.

அவரது மனைவியும், மகளும் இந்த நாய்க்குட்டியை விரும்புகின்றனர்.  ஹசிகோ  என்று பெயர் சூட்டுகிறார்கள். அவர், குட்டியை மிகவும் அன்பாக வளர்த்து வருகிறார். அவர் தொடர் வண்டியில் ஏறி அடுத்த ஊருக்குப் பணி நிமித்தமாக தினமும் போய் வருகிறவர். அவர் தினமும் காலையில் தனது வீட்டிலிருந்து நடந்து தொடர்வண்டி நிலையம் வருவார். அதுவும் கூடவே வரும். வரும் வழியில் அவரது நண்பர்கள் இருவரைப் பார்த்துப் பேசுவார். ஒருவர் நடைபாதைக் கடையும், மற்றொருவர் ஒரு சிறு கடையும் வைத்திருப்பவர்கள். அது வாலாட்டிக் கொண்டு நிற்கும். அவர் தொடர்வண்டியில் ஏறிப் போனபின்பு அது வீடு திரும்பும். வழியில் அந்த இரு நண்பர்கள் ஏதாவது தீனி கொடுப்பார்கள். இது சாப்பிடும்.

ஹசிகோவுடன் அவரது குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அவரது மகளுக்குத் திருமணம் ஆகி வெளியூர் சென்று விடுகிறாள். ஒருநாள் அடுத்த ஊருக்குச் சென்ற அவருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள். அவரது மனைவி மருத்துவ மனையிலேயே இருக்க நேரிடுகிறது. ஹசிகோ தினமும் காலையில் தொடர் வண்டி நிலையம் செல்லும். மாலையில்அவர் வழக்கமாகத் திரும்பும் வண்டி வரும்வரை அங்கேயே இருக்கும். பின்னர் வழியில் நண்பர்கள் தரும் தீனியை சாப்பிட்டுவிட்டு வீட்டில் அவுட் ஹவுசில் படுத்துக் கொள்ளும். மருத்துவச் செலவு காரணமாக அந்த வீட்டை விற்று விடுகிறார்கள். நோய் வாய்ப்பட்ட அவர் ஒரு நாள் இறந்துவிடுகிறார். அவரது மனைவி, தன் மகள் வீட்டுக்குச் சென்று விடுகிறார்.

ஹசிகோ தொடர் வண்டி நிலையத்திலேயே தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தனது எஜமானரின் வருகைக்காக காத்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான குளிர் காலம். பனி கொட்டுகிறது. நடுங்கிக்கொண்டே காத்திருக்கின்றது. இவ்வாறு சில வருடங்கள் செல்கிறது. பின்னர் அதே தொடர் வண்டி நிலையத்தில் இறந்து விடுகிறது.

ஊர்மக்கள் ஹசிகோவுக்கு தொடர்வண்டி நிலைய வாசலில் அதன் சிலையை வைக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட அவரது மனைவி அவ்வூருக்கு வந்து ஹசிகோவின் சிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறாள்.

இது உண்மைக் கதை. ஹசிகோ வின் சிலை இப்போதும் ஜப்பான் – டோக்யோ – ஷிபுயா(SHIBUYA) ரயில் நிலையத்தில் இருக்கிறது.

மனிதனுக்கும் நாய்களுக்கும் உள்ள உறவு கற்காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. கற்கால மனிதன் முயல் போன்ற சிறு பிராணிகளை வேட்டையாடிக் கொண்டு வர நாயைப் பழக்கினான். மனிதன் தின்ற மிச்ச மீதி உணவை நாய்க்குப் போட்டான்.

அந்த பந்த பாசம் இன்றும் தொடர்கிறது. அமெரிக்காவில் அமெரிக்கர்கள் ‘வீட்டுக்கு ஒரு நாய்’ (சிலர் இரண்டு) வளர்க்கிறார்கள். அங்கு நாய் வளர்ப்பதற்கு சட்டங்கள் உண்டு. சட்டத்தை மீறினால் கடும் தண்டனை உண்டு. நாயுடன் நடைப் பயிற்சி செல்வோர் கையில் ஒரு நெகிழிப் பையும் கொண்டு செல்ல வேண்டும். வழியில் அது மலம் கழித்தால், அதை கையுறை அணிந்து நெகிழிப் பையில் அள்ளி எடுத்து அருகில் இதற்கென இருக்கும் பெட்டியில் போடவேண்டும்.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ரேபீஸ் என்னும் வெறி நாய்க்கடி  நோயை அறவே ஒழித்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தெருவோர இறைச்சிக்கடை முன்பாக ஒருசில நாய்களை நிச்சயமாகக் காண முடியும். ‘தெரு நாய்களைக் கொல்ல வேண்டும்’- என்று நடிகர் மோகன்லால் சில மாதங்கள் முன்பு கடுமையாகக் கூறி இருந்தார். அதற்கு, புளு கிராஸ் அமைப்பினரும் நடிகர் விஷாலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சில ஊர்களில் தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு குழந்தைகளைக் கடித்து விடும் செய்திகள் அடிக்கடி வருகின்றன. தெருநாய்கள் அனைத்துக்குமே வெறி நாய்க்கடி நோய் ரேபீஸ் இருப்பதில்லை. பொதுவாக நாய்கள் மனிதனைக் கடிப்பதில்லை. இன்றைய நாள் வரை ரேபீஸ் நோய் தாக்கிய மனிதரைக்காப்பாற்ற மருத்துவம் இல்லை. வளர்ப்பு நாயோ, தெரு நாயோ, அது கடித்துவிட்டால் ரேபீஸ் தடுப்பூசி கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும். முன்பு தொப்புளைச் சுற்றி 14  ஊசிகள் போடப்பட்டன. தற்போது கை புஜத்தில் 4 ஊசிகள் போட்டுக்கொண்டால் போதுமானது. நாய் வளர்ப்பவர்கள் நாய்க்கும் ரேபீஸ் தடுப்பூசி போடவேண்டும். தாங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

வட கொரியா, தென் கொரியா, சீனாவில் நாய்க்கறியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

நம்மூர் தெரு நாய்களை கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க முடியுமா? நாய்களைப் பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்யவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எந்த நகராட்சியும் இதை செய்வதாகத் தெரியவில்லை. இதைச் செய்வதால், நகராட்சி உறுப்பினருக்கு என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது? கழிப்பறை கட்டினாலோ, சாலை போட்டாலோ கணிசமான கமிஷன் கிடைக்கும்.

தெருவோர இறைச்சிக் கடைகளையே தடை செய்யவேண்டும். இறைச்சிக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, அவற்றை உரக் கிடங்குகளுக்கு அனுப்பவேண்டும்.

தெருவில் சுற்றித் திரியும் ஒருசில பசுக்களையே கட்டுப்படுத்த முடியாத அரசு, கூட்டங் கூட்டமாய்த் திரியும் நாய்களையா கட்டுப்படுத்திவிடப் போகிறது?

follow site டாக்டர் ஆர்.எம்.ஆர்.சாந்திலால்
(நிகரன், இதழ் 8)