‘அழிவின் தத்துவம்’ நூல் குறித்து.

.v ponnuchchaamy ni8

வேலாயுதம் பொன்னுச்சாமி.

மனிதர்கள் சமுதாயத்திற்கு வெளியில் இல்லை. சமுதாயம் மனிதர்களை சமூக மனிதனாக்குகிறது. அதேபோல, மனிதர்களும் சமுதாயத்தை உருவாக்குகிறார்கள். சமுதாயம் சமூக உறவுகளால் கட்டமைக்கப்பட்டது.       (அப்பா- மகள், மனைவி-கணவன், முதலாளி-தொழிலாளி, மருத்துவர்-நோயாளி). மனிதர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள சமூக உறவை உணர்ந்து கொள்வதற்கு அவர்களது நம்பிக்கைகள், சிந்தனை முறைகள், மொழி, புலன் உணர்வுகள் உதவி செய்கின்றன. இவற்றின் துணை கொண்டு தங்களுக்கான கருத்து நிலையை மனிதர்கள் உருவாக்குகின்றனர். இதில் அரசியல், பொருளாதாரம், சமூகவியல் பிரதான பங்கு வகிக்கின்றன. கருத்து நிலை என்பது கொள்கை, கோட்பாடு என்று இரு வகைகளாக சுட்டப்படுகின்றது. அப்படி என்றால் கொள்கை என்பது எது? கோட்பாடு என்பது எது என்ற வரையறை நமக்குத் தேவைப்படுகிறது.

கொள்கை என்பது ஒருவரால் ஏற்றுக் கொள்ளப்படும் எண்ணக்கருத்துக்கள், அபிப்பிராயங்கள் என்று சொல்லலாம். தனி மனிதனின் நோக்கு நிலை, சமூகத்தின் பொது மதிப்பீட்டுகள் ஆகியவை கொள்கை என வரையறுக்கப் படுகின்றன.

சமுதாயத்தில் பல பல அறிவுத்துறைகள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இவ்வறிவுத் துறையின் பார்வையில் உதாரணமாக மொழியியல், உளவியல், தொன்மவியல், இனவரைவியல், அமைப்பியல், பின் அமைப்பியல், யதார்த்தவாதம்- இப்படியான கருத்துநிலைகள் கொண்டு விளக்க முயல்வது கோட்பாடுகள் ஆகின்றன. சமூகப் பிரச்சினையை இனங்காணவும் அதைத் தீர்ப்பதற்குமான வழிகளாகவும், குறிப்புகளாகவும் இக்கொள்கைகளும் கோட்பாட்டுப் பார்வையும் நமக்கு உதவுகின்றன.

எஸ்.என்.நாகராஜன் என்ற மரபியல் ஆய்வரிஞரின் அழிவின் தத்துவம் என்ற நூல் இன்று அதிகம் உரையாடலுக்கு உட்படுத்தப்படும், சூழலியம் குறித்து அன்றே பேசப்பட்ட புத்தகம் ஆகும். விஞ்ஞான வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் கேடுகள் எப்படி சில வகைப்பட்ட கொள்கைகளால், கோட்பாடுகளால் நிலைப்படுத்தப்பட்ட கூறுகளைக் கொண்டிருந்தன என்பதைக் கட்டுட்டைத்துக் காட்டுகிறார் எஸ்.என்.நாகராஜன். இப்படித்தான் யூத மதத்தில்(ஜியானிசம்) கூறப்படும் கொள்கை ஒன்று யார் வேதநூல்களை (ஜெட் அவெஸ்டா) ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகினை இறைவன் வழங்கியுள்ளார் என்கிறது. அப்படி என்றால் யூத மதத்தை ஏற்காதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை என்பது சொல்லப்படாத கருத்தாகிறது. ஏற்காதவர்களை அழித்தொழிக்கலாம்,

அடிமை கொள்ளலாம். இறைவனுக்குப் பிரியமான யூதர்கள் சிறப்புரிமை பெற்ற இனம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இறைவனால் சிறப்புரிமை பெற்றவர்கள் என்பது நவீன காலத்தில் தொழில் நுட்பத்தால் சிறப்புரிமை பெற்றவர்கள் என்று மாறி இருக்கிறது.

விஞ்ஞானம் மனிதனுக்கு சேவை செய்யும், ஒய்வு நேரத்தைத் தரும் என்ற நோக்கு நிலை எவ்வளவு தூரம் பொய் ஆகியுள்ளது. அதற்காக விஞ்ஞானம் கூடாது என்பதல்ல. அது வரையறுக்கப்பட்ட தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதே எஸ்.என்.நாகராஜனின் கருத்தாகும். ஒரு பொத்தானின் தொடுகையில் உலகம் இருக்குமா? இல்லாமல் போகுமா? என்ற நிலையில் உலகம் நிறுத்தப் பட்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் பேரவலத்தை இரண்டு உலகப் போர்கள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன. விலங்கினங்கள் ஒன்றை ஒன்று அழித்து உண்டுதான் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக் கொள்கின்றன. வலு உள்ளது வாழும் என்ற டார்வினின் நோக்கு நிலை பாசிச சிந்தனைக்கும், வன்முறையை சரி என்று சொல்வதற்கும், சுரண்டலே நியாயம் என்றும் தவிர்க்க முடியாதது என்ற சிந்தனைக்கும் சாதாரண மனிதர்களை இட்டுச் செல்லும். விலங்குகள் மற்றதை அழித்துதான் வாழ்கின்றன என்ற நோக்கு நிலை மற்றவர்களைத் திட்டமிட்டு ஒழிக்கும் மனிதச் செயலை மறைக்கிறது. விலங்குகளிடம் திட்டமிட்ட செயல் இல்லை. உண்மையில் உயிர்களிடத்தில் போட்டியைக் காட்டிலும் ஒத்திசைவே அதிகம் உள்ளது ( புலி அடித்துத் தின்ற மாடு எப்படி பிற உயிர்களுக்கு உணவாகிறது) வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும்போது எளியது கீழ்ப்படிந்தே ஆகவேண்டும் என்பதை நியாயப்படுத்தலில் முடியும். வெல்லற்கரியதாக இருந்த டினோசார்களும், அரக்க ஆமைகளான அம்மோனபைட்டுகளும், மிகப் பெரிய யானைகளாகக் கருதப்பட்ட கம்பளி யானைகளும் இன்று இல்லாதொழிந்தது எதைக் காட்டுகிறது. இயற்கையில் உள்ள முரண்பாடு ஒருபோதும் ஆதிக்கத் தன்மையையோ, பகைத்தன்மையையோ பெறுவதில்லை. இயற்கையின் ஒத்திசைவை அளவுக்கு மீறி  நாம் கெடுத்தால் முரண்பாடு பெரும் வெடிப்பாக கிளம்பி அதன் முதல் பலி மனிதனாகவே இருக்கும். மனிதன் இயற்கையின் எஜமானன் என்பது ஆதிக்கக் கருத்தாகும். மனிதன் இப்பூவுலகின் தலைமகன், அவன் அனைத்தையும் அடிமைப்படுத்தலாம், வெல்லலாம் என்ற கருத்தை உட்பொதிந்துள்ளது. ஒன்றை அடிமைப்படுத்திதான் ஒன்று எஜமானன் ஆகமுடியும் என்ற தர்க்கத்துக்கு இது இட்டுச் செல்லும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம்தான், எஜமானன் அல்ல. இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.

உற்பத்திப் பெருக்கம் காரணமாக மனித வாழ்வில் இன்பமும் சுதந்திரமும் கூடும் என்ற கோட்பாடானது இயற்கை அழிக்கப்படுவதை மறைக்கிறது. உற்பத்திப் பெருக்கத்திற்கு இயற்கை வளங்கள் அழிக்கப் படுகின்ற சூழலில் மாசு ஏற்படுகின்றது. மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையாவதற்கும், நுகர்வுக் கலாசாரத்திற்கும் இட்டுச் செல்கிறது. (fan, mixy, fridge, grinder) மெய் நிகர் உண்மைக்கு அதாவது வர்ச்சுவல் ரியாலிட்டிக்கு அடிமையாகியுள்ளான் மனிதன். பேராசையையும், நிராசையையும், மன உளைச்சலையும், புதிய நரம்பியல் நோய்களையும் உற்பத்திப் பெருக்கம் உருவாக்கியுள்ளது. நுகர்வு மனித மதிப்புகளைச் சிதைத்துள்ளது. பணம், அதிகாரம், நவீன பொருட்கள் உள்ளவனே அந்தஸ்தானவன் என்றானது. உள்ள வருவாய் போதும் என்று வாழ்வதும், படிப்பதும், ரசிப்பதும் அந்தஸ்து இல்லாமல் போனது. அதிகாரம் இல்லாது வாழ்வது என்ற அமைதியான வாழ்வு வாழத் தகுதியற்ற வாழ்வாக, கிண்டலுக்கான வாழ்வாகப்

பார்க்கப்படும் மனோவக்கிரம் வளர்ந்துள்ளது. உற்பத்திப் பெருக்கம் இருப்பவன், இல்லாதவன் இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது. பிளவுபடாத சுதந்திரத்தைக் கானல் நீராக்கியுள்ளது. சுதந்திரம் என்பது பிளவுபடாதது. இருப்பவன் இல்லாதவன் பிளவு இருக்கும் வரை சுதந்திரமும் பிளவுபட்டதாகவே இருக்கும். இருப்பவனின் சுதந்திரம் இல்லாதவனை அடக்குவதாகவும், இல்லாதவனின் சுதந்திரம் இருப்பவனின் செயலில் தலையிடுவதாகவும் இருக்கும். உற்பத்திப் பெருக்கம் இம் முரணை அதிகப் படுத்தவே செய்யும்.

இன்று உலகம், வளர்ச்சிÏவாழ்வாதாரம் என்ற கூர் முரணில், லட்சம் பேர் நன்றாக வாழ ஆயிரம்பேர் அழிவது தவிர்க்க முடியாதது என்ற மனிதாபிமானமற்ற, ஆதிக்க கருத்து நிலையில், நவீனத்துவம் என்ற பெயரால் மானுடத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தி இருக்கிறது. இதற்கு ஒரே மீட்சி எளிய வாழ்க்கை, வரையறுக்கப்பட்ட விஞ்ஞானம். இதையே தன் புத்தகம் முழுவதும் மானுட அக்கறை கொண்டு எழுதுகிறார் எஸ்.என்.நாகராஜன். நவீன அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் முழுமையான திறனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார். காலமும், இயற்கையும் கை ஏந்தி நிற்கிறது, நவீன அறிவியலைத் திறனாய்வு செய்ய வேண்டிய செயல்பாட்டைக் கோரி.

(நிகரன், இதழ்-8, பக்கங்கள்-16,17,18)