வாழ்வுக்கான அர்த்தம்

kovai gnaniவாழ்வுக்கான அர்த்தம் என்ற தேடல் வழியாகத்தான் மார்க்சியத்தை நான் ஆரத் தழுவிக் கொண்டேன். வரலாற்றில்தான் நான் வாழ்கிறேன். நெடுங்கால வரலாற்றின் வழியே மாறிவரும் சமூகச் சூழல்தான் என்னைப் படைக்கிறது, என் வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுகிறது. நான் தனியன் இல்லை. மாபெரும் வரலாற்று இயக்கத்தில் நான் ஒரு துளி. எனக்குள்ளும் வரலாறும் சமூகமும் இயங்குகின்றன. இந்த இயக்கத்தின் வழியே இயற்கையோடும், உயிர்களோடும், பிரபஞ்சத்தோடும் நான் உறவு கொண்டிருக்கிறேன். உடமையும் அதிகாரமும் என்னை ஆட்கொள்வதன் மூலம் என்னைச் சிறுமைப் படுத்துகின்றன, என்னை அடிமைப் படுத்துகின்றன.
இவற்றின் ஆதிக்கத்திற்கு என்னை நானே விட்டுத் தருவதன் மூலம் என் வாழ்வின் அழகையும் ஆற்றலையும் நான் அழித்துக் கொள்கிறேன். வரலாற்றின் வரையறைகளுக்குள் வாழ நேர்ந்த போதிலும் ஆதிகாலம் முதற்கொண்டு எனக்குள்ளும் தொடர்ந்து வருகிற பொதுமை/சமதர்மம் என்ற நீரோட்டத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள இயலாது. வரலாற்றின் நீரோட்டத்திற்குள்ளிருந்து காலம்தோறும் பொங்கி வழிகிற சமதர்மம் என்ற பேருணர்வில்தான் நான் தழைக்கிறேன். இந்த உணர்வுதான் நான் யார் என்ற புரிதலை எனக்குத் தருகிறது. இதன் மூலம்தான் வரலாற்று இயக்கத்தில், சமூக மாற்றத்திற்கான இயக்கத்தில் என்னைக் கண்டு கொள்ளவும், என் வாழ்வுக்கான அர்த்தத்தை உறுதிப் படுத்திக் கொள்ளவும் இயல்கிறது. மார்க்சியத்தின் வழியில் அல்லாமல் இத்தகைய அர்த்தத்தை, அழகை, ஆற்றலை பெறுவதற்கு வேறு வழியும் இல்லை. என்னுடைய வாழ்வுக்கான அர்த்தம் என்ற எனது தேடல் என்பது, எனக்கு மட்டுமே உரிய தேடல் என்று நண்பர்கள் கருத மாட்டார்கள் என நம்புகிறேன். தனி உடைமையும், அரசு அதிகாரமும் ஆதிக்கம் பெற்றுள்ள எந்த ஒரு சமூகச் சூழலும் மனிதரின் படைப்புத் திறன் முதலியவற்றை அழிக்கவே செய்கின்றன. ஆதிக்கத்திற்கு மக்கள் தங்களை இழந்து தவிக்கின்றனர். வறுமை, நோய் நொடிகள், தற்கொலைகள் முதலிய கொடுமைகளுக்கு மக்கள் உள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு கல்வியோ, வேலை வாய்ப்போ, தரப்படுவதில்லை. இவர்களின் சுதந்திரம் ஒடுக்கப் படுகிறது. இவர்களுக்கு ஆளுமை வளர்ச்சி இல்லை. இந்த மக்களின் வாழ்வுக்கான ஆதாரங்களாகிய நிலம், நீர், காடுகள் முதலிய இயற்கை வளங்களும் இவர்களிடமிருந்து பறிக்கப் படுகின்றன. ஆதிக்க சக்திகள் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் இவர்கள் மீது உச்ச அளவில் திணிப்பதன் மூலம் இவர்கள் வாழ்வின் ஆதாரங்களை மட்டும் அல்லாமல் அழகையும் அர்த்தங்களையும் அழிக்கிறார்கள்.
ஆதிக்கங்கள் அறவே இல்லாத சமூகச் சூழலில்தான் இவர்கள் மனித மாண்புகளுடன் வாழ முடியும். இந்த உண்மையை நமக்கு உணர்த்துவது மார்க்சியம்.
மார்க்சியத்தை அரசியல் என்று மட்டுமே நான் கருதவில்லை. மாறிவரும் உலகத்தையும், வாழ்வையும் தொடர்ந்து புரிந்து கொள்வதற்கான பேரறிவு என்று மார்க்சியத்தை நான் கொள்கிறேன். நெருக்கடிகள் மிகுந்த வரலாற்றுச் சூழலைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம் தவிர வேறு நெறி இல்லை என்பது மட்டும் அல்ல, நெருக்கடி மிகுந்த வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம்தான் திறவுகோல். இவ்வகையில் மார்க்சியம் ஒரு மெய்யியல். இம்முறையில் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்வது ஒரு கல்விமுறை. இந்த மெய்யியலும், கல்வி முறையும் என்றும் காலாவதியாக முடியாது.
கோவை ஞானி.
(‘மார்க்சியத்திற்கு அழிவில்லை’ நூலின் முன்னுரையில்)
நிகரன், இதழ் 12, பக்கம் 10

நான் மரணம் அடையும் நாளில்

maluking ni12அடிக்கடி ஒரு விஷயத்தை நான் யூகிக்கிறேன். மரணம் என்றழைக்கப் படுகின்ற வாழ்வின் இறுதியான பொது அம்சம் நிகழப் போகும் நாள் குறித்து நாம் அனைவரும் யதார்த்தமாக நினைக்கிறோம் என்று யூகிக்கிறேன்.
நாம் அனைவரும் அது குறித்து நினைக்கிறோம். என்னுடைய சொந்த மரணம் குறித்தும் என்னுடைய சொந்த இறுதிச் சடங்கு குறித்தும் நான் நினைக்கின்றேன். நான் சொல்ல விரும்புவது எதுவாக இருக்கும் என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். இன்று காலையில் அதைத்தான் உங்களிடம் கூறப் போகிறேன்.
நான் மரணம் அடையும் நாளில் உங்களில் யாராவது என்னருகே இருந்தால், எனக்கு நீண்ட இறுதிச் சடங்கு நடத்த வேண்டாம். அதை நான் விரும்பவில்லை.
இரங்கல் உரை நிகழ்த்த யாரையாவது நீங்கள் அழைத்தால் அவர் நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.
அவர் என்ன பேச வேண்டும் என்பது குறித்து நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அடிக்கடி எண்ணி வியக்கிறேன்.
நான் நோபல் பரிசு பெற்றவன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல.
நான் 300 அல்லது 400 இதர பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதைக் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல. நான் எந்தப் பள்ளியில் படித்தேன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.
பிறருக்குச் சேவை செய்வதற்காக மார்டின் லூதர் கிங் தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் குறிப்பிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
மார்டின் லூதர் கிங் சிலரிடம் அன்பு காட்ட முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் கூற வேண்டுமென்று விரும்புகிறேன்.
நான் சரியாக நடந்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து நடைபோட முயற்சித்தேன் என்று அந்த நாளில் நீங்கள் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பட்டினியால் வாடுவோருக்கு உணவளிக்க நான் முயற்சித்தேன் என்றும், ஆடையின்றி இருந்தோருக்கு ஆடையளிக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்றும் அந்த நாளில் நீங்கள் கூற இயலக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சிறையிலிருப்போரைப் போய்ச் சந்திக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்பதை அந்த நாளில் நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
மனித குலத்தை நேசிக்கவும், அதற்கு சேவை செய்யவும் நான் முயற்சித்தேன் என்று நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
ஆம் நான் முரசறைந்தவன் என்று நீங்கள் கூற விரும்பினால், நீதிக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். சமாதானத்திற்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். நேர்மைக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள்.
இதர அற்பமான விஷயங்கள் ஒரு பொருட்டல்ல.
விட்டுச் செல்வதற்காக என்னிடம் பணம் எதுவும் இருக்காது. விட்டுச் செல்வதற்காக அருமையான மற்றும் ஆடம்பரமானவை எதுவும் என்னிடம் இருக்காது. ஆனால் கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை நான் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.
நான் கூற விரும்புபவை அனைத்தும் இதுதான்.
மார்டின் லூதர் கிங்
(சவுத் விஷன் வெளியீடான ‘மார்டின் லூதர் கிங்’ நூலிலிருந்து)
நிகரன், இதழ் 12, பக்கங்கள் 18,19

சாவதுகூட இன்பம்

kovai gnani

ஆதிப் பொதுமைச் சமுதாயத்தில் மனிதர்கள் இனக்குழுவாக வாழ்ந்தார்கள். கூடி உழைத்தார்கள். பகிர்ந்துகொண்டார்கள். பிறகு வர்க்கங்களாகப் பிளவுபட்டார்கள். மனிதன் தனக்குள் அந்நியமானான். வரலாற்றுக் காலத்துக்கு முன்பு இயற்கையோடும், சமுதாயத்தோடும், தன்னோடும் ஒன்றியிருந்த மனிதன் இப்பொழுது இயற்கையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், தன்னிலிருந்தும் பிளவுபட்டான். அந்நியமானான். அந்நியமாதல் என்ற இந்தப் பிளவு அவனுக்குள் துயரமாக உறைந்தது. இது வேண்டாமென்றாலும் அவனால் தவிர்க்க இயலவில்லை. இயற்கையோடும், சமுதாயத்தோடும் ஒன்றி இருக்கிற சமூகம்தான் இவனுக்கு மீண்டும் மீண்டும் தேவை. இதுதான் இவனுக்கு அறம். சமதர்மம் என்று பெயர் சொல்லப்படுவது இந்த அறம்தான். இந்த அரத்தில்தான் மனிதன் பிறரோடும், உயிரினங்கலோடும், இயற்கையோடும் நேசத்தோடு வாழ முடியும். இந்த அற உணர்வின் காரணமாகத்தான் ஆதிக்கங்களுக்கு எதிராக இவன் கலகம் செய்கிறான். கிளர்ந்தெழுகிறான். இதற்காக சாவதுகூட இன்பம் என்று கருதுகிறான்.

சோவியத் ஒன்றியம் தகர்ந்ததையொட்டி மார்க்சியம் இன்று கடுமையான கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறது.

மார்க்சியத்திற்கு உள்ளிலிருந்து அதன் உள்ளுறை ஆற்றல்களை மேம்படுத்தினால் ஒழிய இன்றைய உலகச் சிக்கல்களை எதிர்கொள்வதாக மார்க்சியம் இருக்க முடியாது. கட்சி சார்ந்தவர்களைப் பொறுத்தவரை இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. உலக அளவில் மார்க்சியவியல் என்ற ஆய்வுத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மார்க்சியம் ஆக்க முறையிலான மார்க்சியம். இதற்கான தூண்டுதல்கள் மார்க்ஸ் முதலியவர்களின் படைப்புகளில் இருந்தே கிடைக்கின்றன. மார்க்சியத்தை வெறும் அரசியலாக மட்டுமே பார்த்தவர்கள் அல்லது செயல் படுத்தியவர்கள் மார்க்சியத்தின் நுட்பங்கள் மற்றும் பன்முகப் பரிமாணங்களைப் புறக்கணித்தனர். இன்று எல்லாவற்றையும் திரும்பப் பார்க்க வேண்டி இருக்கிறது.

மார்க்சியத்திற்கு வெளியில் வளர்ச்சி பெற்றிருக்கிற அறிவுத்துறை மற்றும் கலைத்துறை ஆக்கங்களையும் மார்க்சியர் உள்வாங்கிக் கொண்டு மார்க்சியத்தைப் புதுப்பிக்க வேண்டி இருக்கிறது. கட்சி சார்ந்தவர்கள் தமக்குள்ள இறுகி இருப்பதன் காரணமாக இத்தகைய மறுபார்வைக்கு இடம் தருவதில்லை. கட்சிக்கு உள்ளிருந்து சில கசப்பான அனுபவங்களைப் பெற்று அதே சமயம் மார்க்சியத்தைக் கைவிடாதது மட்டுமின்றி மார்க்சியத்தின்பால் மேலும் மேலும் நேயம் கொண்டவர்கள் தமிழகத்திலும் இருக்கின்றனர். இவர்களையும் உள்ளடக்கித்தான் இன்று மார்க்சிய பற்றிப் பேசுவது வளமான பார்வையாக இருக்க முடியும்.

(முனைவர் சு.துரை அவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சிய நோக்கு என்ற நூலுக்கு கோவை ஞானி அவர்கள் எழுதிய அணிந்துரையில் இருந்து)

நிகரன், இதழ் 11, பக்கம் 29 

வரலாற்றை படைக்க வாழ்வோம்

karumalaithamizhazhan ni11
உண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யன்று
உயிர்வாழ்தல் மட்டுமிங்கே வாழ்க்கை யாகா
எண்ணற்ற உயிரினங்கள் இதைத்தான் நாளும்
எந்தவொரு மாற்றமின்றிச் செய்கிற திங்கே
மண்மீது இவைகளெல்லாம் வாழ்ந்த தற்கு
மறையாத சுவடுண்டா எடுத்துச் சொல்ல
கண்மூடி மறைந்திட்ட முன்னோர் தம்முள்
கல்வெட்டாய் நின்றிருப்போர் எத்த னைப்பேர்?

பிறந்ததினால் வாழ்ந்திடுவோம் என்றி ருப்போர்
பிறப்பதனின் பெருமையினை உணரா தோர்கள்
பிறந்ததுவே சாதிக்க எனநி னைப்போர்
பிறப்பிற்குப் பெருமையினைச் சேர்ப்போ ராவர்
பிறந்திட்ட அனைவர்தம் வாழ்க்கை யிங்கே
பின்பற்றும் வரலாறாய் ஆவ தில்லை
பிறப்பதனை வரலாறாய் மாற்று வோர்தாம்
பின்பற்றும் வாழ்க்கையாக வாழ்ந்தோ ராவர்!

வரலாற்றை உருவாக்கா வாழ்க்கை யாக
வாழ்வதிலே எந்தவொரு பொருளு மில்லை
வரலாற்றை உருவாக்கும் வாழ்க்கை யாக
வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை யாகும்
வரலாறாய் ஆனவர்கள் யாரு மிங்கே
வாழ்க்கையினைத் தமக்காக வாழ்ந்த தில்லை
வரலாற்றைப் படைத்திடவே பிறருக் காக
வாழ்ந்திந்த பிறப்பிற்குச் சிறப்பைச் சேர்ப்போம்!

பாவலர் கருமலைத்தமிழாழன்
நிகரன், இதழ் 11, பக்கம் 40

சால்வடார் அலண்டே

ஒரு சிலி அனுபவம்.allende 1

லத்தீன் அமெரிக்காவில் சிலி நாட்டில் தேர்தல் மூலம் மக்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சீயவாதி தோழர் சால்வடார் அலண்டே ஆவார். இந்தத் தேர்வு முதலாளித்துவ உலகிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
தோழர் சால்வடார் அலண்டே சிலி நாட்டில் சாண்டியாகோ நகரில் 1908ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் பிறந்தார். தனது உயர்நிலைக் கல்வியை ‘வால்பரைசா’ நகரில் பயின்றார். பின்னர் சிலி பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வி பயின்று மருத்துவரானார். இளம் வயதிலே இத்தாலியப் புரட்சியாளர் ஒருவரின் தொடர்பால் புரட்சிகர எண்ணம் கொண்டவரானார். 1933ஆம் ஆண்டிலே தனது 25வது வயதிலே தனது தோழர்களுடன் இணைந்து ‘ சிலி சோஷலிஸ்ட் கட்சி’யை உருவாக்கினார். அரசியலில் திவிரமாக ஈடுபட்டார்.
சால்வடார் அலண்டே சிலியின் ஜனாதிபதி தேர்தலில் 1952,1958,1964 ஆகிய ஆண்டுகளில் நின்று தோல்வியடைந்தார். அலண்டேக்கு ஆரம்ப முதலே சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது சிலி கம்யூனிஸ்ட் கட்சி 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் உலகப் புகழ் பெற்ற கவிஞர்’ தோழர் ‘பாப்புலோ நெரூடா’வை நிறுத்த முடிவு செய்திருந்தது. இடதுசாரிகளின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக எல்லா இடதுசாரிகளின் கூட்டணி அமைப்பான மக்கள் ஐக்கிய முன்னணி தோழர் சால்வடார் அலண்டேயை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. அதன் முடிவின்படி கம்யூனிஸ்ட் கட்சி பாப்லோ நெரூடாவை வாபஸ் பெற்றது. பாப்லோ நெரூடா அலண்டேயின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
சிலிநாடு ஏறக்குறைய இரு நூறு ஆண்டுகாலம் பணக்கார வர்க்கங்களின் பிரதிநிதிகளால் பல்வேறு கட்சிகளால் ஆட்சி செய்யப்பட்டுவந்தது. மக்களுக்கு வறுமை மட்டுமல்ல சிறையும் குண்டாந்தடியும் துப்பாக்கி குண்டுகளும் தாராளமாகக் கிடைத்தன. இச்சூழ்நிலையில்தான் சிலியின் இடதுசாரிக்கட்சிகளின் சார்பாக தோழர் அலண்டே ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டார். சாண்டியாகோ நகர உழைக்கும் மக்கள், கோம்கியூபோ கல்கரிச்சுரங்கத் தொழிலாளிகள், பாலைவனத்தின் செப்புச்சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் மக்களின் பெருந்திரள் கூட்டம் உற்சாகமாக தேர்தலை ஒரு போர்க்களமாக நினைத்து அலண்டேயின் வெற்றியை உறுதிப் படுத்தியது. அலண்டே தேர்தலில் வெற்றிபெற்றார். தேர்தல்முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் சிலியில் நடந்தது முற்றிலும் ஒரு புரட்சியே. எல்லா இடங்களிலும் அதைப் பற்றிய சர்ச்சைகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றன. உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் பல்லைக் கடித்து உருமிக்கொண்டிருந்தனர். அலண்டேயின் வெற்றி அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை அதிர வைத்தது. அவரை ஆட்சியேறவிடாமல் தடுக்க சூழ்ச்சிகள் பல செய்யப்பட்டன. அதனை முறியடித்தவர் சிலியின் தரைப்படை சேனாதிபதி ‘ஜெனரல் ரெனே ஷ்னீடர்’ஆவார்.
தரைப்படை சேனாதிபதியை ஒழித்துக்கட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவு செய்தது. அதன்படி அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிங்கர் மூலம் சி ஐ ஏ இயக்குனர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ்க்கு வெற்றுக்காசோலையை அளித்தார் என ஆவணங்கள் கூறுகின்றன. சதிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் சிலி ராணுவத்தில் இருந்த ஜெனரல் ராபர்ட்டோ வயக்ஸ் என்பவரைப் பயன்படுத்தியது. சிலியின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஜெனரல் ‘ஜெனே ஷ்னீடர்’ கொல்லப்பட்டு ஆதிக்கவர்க்கம் பழியைத் தீர்த்துக்கொண்டது.
அலண்டேயின் புதிய ஆட்சி அரசியல்சட்டத்திற்குள்ளிருந்தவாறே சிலியின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுவது என்ற முடிவை எடுத்து அமுல்படுத்தத் தொடங்கியது. ஆட்சிக்கட்டிலேறிய அலண்டே மக்களின் ஆதரவுடன் சோசலிஸ திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தார். சிலியின் தேசியச் செல்வமான செப்புச்சுரங்கங்கள் அனைத்தும் அமெரிக்கக் கம்பெனிகளுக்குச் சொந்தமாயிருந்தன. அவைகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கினார். சுகாதாரம், கல்வியமைப்பு. ஆகியவைகளை மாற்றியமைத்தார்.
ஏழைச் சிலியில் செல்வம் மறு வினியோகம் செய்யும் போது ஏழைகளின் உணவு சத்துள்ளதாகவும்,நல்ல இருப்பிட வசதிகள் உடை வசதிகள் மேம்பட்டதாகவும் ஆகியது .சிறந்த இலக்கியப் படைப்புகள் ஆவணங்கள் புத்தகங்கள் குறைந்த விலையில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. உழைப்பாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது.
இம் மாறுதல்களின் போது பாதிக்கப்பட்ட சொத்துடைமை வர்க்கங்களும் அன்னிய அமெரிக்கக் கம்பெனிகளும் பெரும் சதித்திட்டங்களில் இறங்கின. அன்னியச் செப்புச்சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதையொட்டியே மோதல்கள் ஆரம்பமாயின. உலகமக்களின் அனுதாபம் சிலிக்கு ஆதரவாகத் திரும்பியது. இந்த முயற்சி சிலியின் சுயதேவைப் பூர்த்திக்கான கால்வைப்பு என்பதை உலகம் புரிந்துகொண்டது. சோஷலிசநாடுகள் இவருடைய கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. சோஷலிஸ்ட் கியூபா நல்ல உறவைப் பேணியது. அலண்டே 1972ல் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்தார். சிலியின் முன்னேற்றம் உலகிற்குக் கண்கூடாகத் தெரிந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சிலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த பல சதித்திட்டங்களைத் தீட்டியது. செப்புச் சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபின் அமெரிக்காவின் பழிவாங்கும் செயல் தீவீரமடைந்தது. வன்முறையாக உருக்கொண்டது. உள் நாட்டிலிருந்த கிருஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் அவர்களது கைப் பாவைகளாக மாறினர். இவர்கள் உணவுப் பண்டங்களை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டனர். செயற்கைப் பஞ்சத்தைஉருவாக்கினார்கள். துரோகிகளை வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டித்தீர்த்தது.

அமெரிக்கக் கைக்கூலி ஜெனரல் பினோசெட் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினான். அலண்டேயைச் சுட்டுக் கொன்றான். அவரது நண்பரும் அவருக்கு வலது கரமாகவும் திகழ்ந்த கவிஞர் தோழர் பாப்லோநெரூடாவும் இறந்தார். சிலியின் ராணுவம் தனது தாய் நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் இழைத்தது. ஜனநாயகம் தழைத்துக் கொண்டிருந்த சிலியில் அதன் தலைவர் சல்வடார் அலண்டேயைப் படுகொலை செய்து1973 செப்டம்பர் 11ம் நாள் ஆட்சியைக் கைப்பற்றினான் கொடுங்கோலன் ராணுவ வெறியன் பினோசெட். எதிர்த்துப் போராடிய மக்களைப் படுகொலை செய்தான். 30000ம் பேர் கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர். அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிலை நிறுத்தினான் பினோசெட்..
பல ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பின் வீழ்ந்தான் பினோசெட்.. இன்று லத்தீன் அமெரிக்காவில் பலநாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடதுசாரி அரசுகள் அமைந்துள்ளன. அவை இடதுசாரிப் பாதையில் வெற்றிநடை போடுகின்றன. உலகம் முழுவதும் சோஷலிசம் வெல்லும் என்பது நிச்சயம். அவை அலண்டே போன்ற உத்தமத் தோழர்களின் தியாகத்தால்தான் என்பது கண்கூடு.

கட்டுரையாளர்: தோழர் இரா. பாலச்சந்திரன்.
(நிகரன், இதழ் 7)

வெறி நாயும் ‘வெரிகுட்’ நாயும்

dr. santhil lal ni 8
ஹசிகோ (HACHIKO) என்னும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காக இந்தக் கதைச் சுருக்கம்.

ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு ஒரு நாய்க்குட்டி பார்சல் மூலம் அனுப்பப் படுகிறது. தொடர்வண்டி நிலையத்தில் அந்தக் குட்டி நாய் பார்சல் பெட்டியிலிருந்து வெளியே வந்து விடுகிறது. யார் யாருக்கு அனுப்பியது என்னும் துண்டுக் காகிதம் கிழிந்து, காணாமல் போய் விடுகிறது. தொடர்வண்டி நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.  அந்தக் குட்டி நாய், பலரது கால்களைப் பின் தொடர்ந்து போய் வந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை.

பயணி ஒருவரின் காலைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அவர் அதைப் பாசத்துடன் தூக்கி வைத்துக் கொள்கிறார். நிலைய அதிகாரியிடம் அந் நாய்க்குட்டியை ஒப்படைக்கிறார். அதன் விபரம் (யார் யாருக்கு அனுப்பியது) தெரியாததால், அதை அவரே வளர்க்கும்படியும், அக்குட்டியைத் தேடி யாரும் வரும்போது அதை அவர்களிடம் ஒப்படைக்கலாம் என்றும் நிலைய அதிகாரி  சொல்லிவிடுகிறார். ஆகவே, அந்தப் பயணி  அதை எடுத்துக்கொண்டு, தனது ஊருக்கு வந்து தனது ஊர் தொடர்வண்டி நிலைய அதிகாரியிடம் விபரம் கூறிவிட்டு, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்.

அவரது மனைவியும், மகளும் இந்த நாய்க்குட்டியை விரும்புகின்றனர்.  ஹசிகோ  என்று பெயர் சூட்டுகிறார்கள். அவர், குட்டியை மிகவும் அன்பாக வளர்த்து வருகிறார். அவர் தொடர் வண்டியில் ஏறி அடுத்த ஊருக்குப் பணி நிமித்தமாக தினமும் போய் வருகிறவர். அவர் தினமும் காலையில் தனது வீட்டிலிருந்து நடந்து தொடர்வண்டி நிலையம் வருவார். அதுவும் கூடவே வரும். வரும் வழியில் அவரது நண்பர்கள் இருவரைப் பார்த்துப் பேசுவார். ஒருவர் நடைபாதைக் கடையும், மற்றொருவர் ஒரு சிறு கடையும் வைத்திருப்பவர்கள். அது வாலாட்டிக் கொண்டு நிற்கும். அவர் தொடர்வண்டியில் ஏறிப் போனபின்பு அது வீடு திரும்பும். வழியில் அந்த இரு நண்பர்கள் ஏதாவது தீனி கொடுப்பார்கள். இது சாப்பிடும்.

ஹசிகோவுடன் அவரது குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அவரது மகளுக்குத் திருமணம் ஆகி வெளியூர் சென்று விடுகிறாள். ஒருநாள் அடுத்த ஊருக்குச் சென்ற அவருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள். அவரது மனைவி மருத்துவ மனையிலேயே இருக்க நேரிடுகிறது. ஹசிகோ தினமும் காலையில் தொடர் வண்டி நிலையம் செல்லும். மாலையில்அவர் வழக்கமாகத் திரும்பும் வண்டி வரும்வரை அங்கேயே இருக்கும். பின்னர் வழியில் நண்பர்கள் தரும் தீனியை சாப்பிட்டுவிட்டு வீட்டில் அவுட் ஹவுசில் படுத்துக் கொள்ளும். மருத்துவச் செலவு காரணமாக அந்த வீட்டை விற்று விடுகிறார்கள். நோய் வாய்ப்பட்ட அவர் ஒரு நாள் இறந்துவிடுகிறார். அவரது மனைவி, தன் மகள் வீட்டுக்குச் சென்று விடுகிறார்.

ஹசிகோ தொடர் வண்டி நிலையத்திலேயே தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தனது எஜமானரின் வருகைக்காக காத்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான குளிர் காலம். பனி கொட்டுகிறது. நடுங்கிக்கொண்டே காத்திருக்கின்றது. இவ்வாறு சில வருடங்கள் செல்கிறது. பின்னர் அதே தொடர் வண்டி நிலையத்தில் இறந்து விடுகிறது.

ஊர்மக்கள் ஹசிகோவுக்கு தொடர்வண்டி நிலைய வாசலில் அதன் சிலையை வைக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட அவரது மனைவி அவ்வூருக்கு வந்து ஹசிகோவின் சிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறாள்.

இது உண்மைக் கதை. ஹசிகோ வின் சிலை இப்போதும் ஜப்பான் – டோக்யோ – ஷிபுயா(SHIBUYA) ரயில் நிலையத்தில் இருக்கிறது.

மனிதனுக்கும் நாய்களுக்கும் உள்ள உறவு கற்காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. கற்கால மனிதன் முயல் போன்ற சிறு பிராணிகளை வேட்டையாடிக் கொண்டு வர நாயைப் பழக்கினான். மனிதன் தின்ற மிச்ச மீதி உணவை நாய்க்குப் போட்டான்.

அந்த பந்த பாசம் இன்றும் தொடர்கிறது. அமெரிக்காவில் அமெரிக்கர்கள் ‘வீட்டுக்கு ஒரு நாய்’ (சிலர் இரண்டு) வளர்க்கிறார்கள். அங்கு நாய் வளர்ப்பதற்கு சட்டங்கள் உண்டு. சட்டத்தை மீறினால் கடும் தண்டனை உண்டு. நாயுடன் நடைப் பயிற்சி செல்வோர் கையில் ஒரு நெகிழிப் பையும் கொண்டு செல்ல வேண்டும். வழியில் அது மலம் கழித்தால், அதை கையுறை அணிந்து நெகிழிப் பையில் அள்ளி எடுத்து அருகில் இதற்கென இருக்கும் பெட்டியில் போடவேண்டும்.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ரேபீஸ் என்னும் வெறி நாய்க்கடி  நோயை அறவே ஒழித்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தெருவோர இறைச்சிக்கடை முன்பாக ஒருசில நாய்களை நிச்சயமாகக் காண முடியும். ‘தெரு நாய்களைக் கொல்ல வேண்டும்’- என்று நடிகர் மோகன்லால் சில மாதங்கள் முன்பு கடுமையாகக் கூறி இருந்தார். அதற்கு, புளு கிராஸ் அமைப்பினரும் நடிகர் விஷாலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சில ஊர்களில் தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு குழந்தைகளைக் கடித்து விடும் செய்திகள் அடிக்கடி வருகின்றன. தெருநாய்கள் அனைத்துக்குமே வெறி நாய்க்கடி நோய் ரேபீஸ் இருப்பதில்லை. பொதுவாக நாய்கள் மனிதனைக் கடிப்பதில்லை. இன்றைய நாள் வரை ரேபீஸ் நோய் தாக்கிய மனிதரைக்காப்பாற்ற மருத்துவம் இல்லை. வளர்ப்பு நாயோ, தெரு நாயோ, அது கடித்துவிட்டால் ரேபீஸ் தடுப்பூசி கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும். முன்பு தொப்புளைச் சுற்றி 14  ஊசிகள் போடப்பட்டன. தற்போது கை புஜத்தில் 4 ஊசிகள் போட்டுக்கொண்டால் போதுமானது. நாய் வளர்ப்பவர்கள் நாய்க்கும் ரேபீஸ் தடுப்பூசி போடவேண்டும். தாங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

வட கொரியா, தென் கொரியா, சீனாவில் நாய்க்கறியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

நம்மூர் தெரு நாய்களை கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க முடியுமா? நாய்களைப் பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்யவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எந்த நகராட்சியும் இதை செய்வதாகத் தெரியவில்லை. இதைச் செய்வதால், நகராட்சி உறுப்பினருக்கு என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது? கழிப்பறை கட்டினாலோ, சாலை போட்டாலோ கணிசமான கமிஷன் கிடைக்கும்.

தெருவோர இறைச்சிக் கடைகளையே தடை செய்யவேண்டும். இறைச்சிக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, அவற்றை உரக் கிடங்குகளுக்கு அனுப்பவேண்டும்.

தெருவில் சுற்றித் திரியும் ஒருசில பசுக்களையே கட்டுப்படுத்த முடியாத அரசு, கூட்டங் கூட்டமாய்த் திரியும் நாய்களையா கட்டுப்படுத்திவிடப் போகிறது?

http://traveltomarketing.com/tropical_discovery.html டாக்டர் ஆர்.எம்.ஆர்.சாந்திலால்
(நிகரன், இதழ் 8)

நாங்கள் வாழ்க்கையைக் கவுரவிக்கிறோம்

bagathsing ni2
“நாங்கள் மனித வாழ்வினை விவரிக்க இயலாத புனிதமானதாகக் கருதுகிறோம். மனிதத் தத்துவத்திற்கு சேவை செய்வதிலே மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதைக் காட்டிலும், எங்கள் உயிரை நாங்களே மாய்த்துக் கொள்வதை விரும்புவோம். நாங்கள் ஏகாதிபத்தியவாதிகளின் கூலிப் பட்டாளத்தைப் போன்றவர்களல்ல. அவர்களுக்கு ஈவிரக்கமின்றி மற்றவர்களைக் கொல்வதையே கற்பிக்கிறார்கள். நாங்கள் வாழ்க்கையைக் கவுரவிக்கிறோம். ஆன மட்டும் அதைப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம்.”
“புரட்சி உலகத்தின் விதி. அது மனிதகுல முன்னேற்றத்தின் அடிப்படை. ஆனால் அதற்கு ரத்தம் தோய்ந்த போராட்டம் தவிர்க்க முடியாததல்ல. தனிநபர் பலாத்காரத்திற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகளைக் கொண்ட சம்பிரதாயமல்ல. புரட்சியை எதிர்ப்பவர்கள் வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள், ரத்தக் களறி முதலியவைகளையே புரட்சி என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் புரட்சி இவற்றுக்குள்ளேயே அடங்கிவிடவில்லை. இவை புரட்சியின் சாதனங்கள் ஆகலாம். ஆனால் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் புரட்சியின் உண்மையான வலு, சமுதாயத்தைப் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மாற்ற வேண்டுமென்னும் மக்களின் தீவிரமான விருப்பமே இருக்கும். நம் காலத்திய நிலைமையில் சில தனி நபர்களைக் கொலை செய்வதே புரட்சியின் நோக்கமல்ல. மனிதனை மனிதன் சுரண்டிக் கொள்ளையடிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்து நம் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெறுவதே புரட்சியின் நோக்கமாகும்.”
பகத்சிங்
நூல்: விடுதலைப் பாதையில் பகத்சிங்.
(நிகரன், இதழ் 3, பக்கம் 19)

கவிதையும் கவிதை மனமும்

http://phoenix-dancing.com/wp-login.php meeraan 2
[தக்கலை கவிதை முகாமில் சூபி கவிதை மொழி  என்ற தலைப்பில் எழுத்தாளர் cytotec no perscription required மீரான் மைதீன் ஆற்றிய உரையின் சிறு பகுதி.]
முந்தைய கவிதை உலகம் அல்லது இப்ப இருக்கிற கவிதை உலகம் அல்லது வரப்போகிற கவிதை உலகம் அல்லது எழுத்துக்குப் பின்னாடி இருக்கிற அரசியல் இதையெல்லாம் தாண்டி கவிதை அப்படீன்னு சொல்லக்கூடியது ஒரு மனுஷனுக்கு உதிப்பாக வரும் அல்லது அவனுக்கு ஒரு  வலியாக வரும். இது என்னுடைய அசெஸ்மென்ட் . சமீபகாலமா நான் புரிஞ்சிகிட்ட   ஒரு விஷயம். அது அவனுக்குள்ளாகவே  தோன்றும். அல்லது யாருக்குள்ள எல்லாம் கவிதை தோன்றுதோ அவன்  எல்லாமே சூபியாக மாறுறான்.
ஆனா கவிதையும் கவிதை மனமும் ஒன்னல்ல. அத நாம நல்லா புரிஞ்சிக்கணும். லைலாவுடைய வீட்டுக்குப் போறதுக்கு மஜ்னு  குதிரையில ஏறுறான். மஜ்னுவுடைய நோக்கம் என்ன அப்படீன்னா லைலாவுடைய வீட்டுக்குப் போய்ச்  சேரணும்கிறது. குதிரையில ஏறுன மஜ்னு என்ன பண்றான்… மஜ்னுவுடைய மைன்ட் முழுவதும் லைலாதான் கெடக்குறா. எங்க பாத்தாலும் லைலாவாத் தெரிஞ்சிட்டே இருக்கு. குதிரை போயிட்டே இருக்கு. ஒரு குறிப்பிட்ட கட்டத்துல திடீர்னு அவன் குதிரையுடைய கடிவாளத்தைப் புடிச்சி நிறுத்திப் பாக்குறான் லைலாவுடைய வீடு தாண்டி குதிரை ரொம்ப தூரம் வந்திருச்சி. அப்பந்தான் மஜ்னுவுக்கு  ஒரு   உண்மை தெரியுது. நம்மதான் லைலாவக் காதலிக்கோம். குதிரை லைலாவக்  காதலிக்கலைன்னு. இதுதான் கவிதைங்கிறதும் கவிதை மனம் என்கிறதும்.
ஒரு கவிதை மனம் அப்படீன்னு சொல்றது மனம் முழுக்க லைலா நெறஞ்சு கெடக்குறது. ஆனா குதிரை அப்படீங்கிறதுதான் கவிதையாயிருக்கு. அதனால கவிதை மனமுள்ள எல்லாரும் கவிதை எழுதணும்னு அவசியம் கிடையாது. கவிதை மனம் அப்படீங்கிறது ஒரு கான்செப்ட்.. கவிதைங்கிறது அதில இருந்து  பிறந்து  வரக் கூடியது. அது சில நேரம்  லைலாவோட வீட்டுக்குள்ளும் போகும், சிலநேரம்  லைலாவுடைய வீடு தாண்டி நீண்ட தொலைவுக்கு அப்பாலும் போகும். ஆனா எங்க போய் நின்னாலும் மறைமுகமாக அதற்குள்ள லைலாதான்  இருப்பாள். இதுதான்  கவிதையுடைய மிக முக்கியமான விஷயமா நான் பாக்குறது. என்ன காரணம்னு சொன்னா.. மனசு.
என் வீட்டில எனக்கு இஷ்டமான ஒரு பூனை ..என்னுடைய செல்லமான ஒரு பூனை. அந்தப் பூனைக்கி ஏழு நாட்களுக்கு முன்னால  உடம்பு சரியில்லாம போயிருச்சி. அப்ப கடந்த சனிக்கிழமை  இரவோட இரவாக அதை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போயி ரெண்டு ஊசியப் போட்டு வீட்டுல வந்து போட்டாச்சு. அப்ப.. டாக்டர் பாத்தாரு. அந்தப் பூனைக்கி ஒன்னும் சொல்லத் தெரியாது. என்ன சாப்பிட்டது என்ன செய்யிது எதுவும் சொல்லத் தெரியாது. அதுக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும். திரும்பத் திரும்ப அப்படியே என்னுடைய கால்ல வந்து மொகத்தப் பொதச்சுக்கிட்டு அப்படியே விழுந்து கிடக்கத்தான் தெரியும். அப்பறம்  நான் அத விட்டுட்டேன். பெறகு திங்கட்கிழமை காலையில மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனேன். ரெண்டு ஊசி போட்டாச்சு. செவ்வாக்கிழமை கூட்டிட்டுப் போனேன் ரெண்டு ஊசி போட்டாச்சி. புதன்கிழமை கூட்டிட்டுப் போனேன் ரெண்டு ஊசி போட்டாச்சி. டாக்டர் புதன் கிழமை சொல்லிட்டாரு. இனி நீங்க ஊசி போடுறதுக்குக் கொண்டு வர வேண்டாம். அதுக்கு ஆகாரம் ஏதாவது குடுக்கிறதுக்கு முயற்சி பண்ணுங்க ..அப்படீன்னு. அப்ப இந்த பில்லர வச்சு  தண்ணி அப்புறம் இந்த எலெக்ட்ரோ பயால் பவுடர்  இதெல்லாம் கொடுக்கிறது. அப்ப வியாழக்கிழமை இரவு வந்து அது தண்ணி குடிச்சதுன்னா அந்தத் தண்ணிய வாமிட் பண்ண ஆரம்பிச்சுது. தண்ணி வந்து உடம்புல நிக்கல. வியாழக்கிழமை இரவு ஒரு பத்து மணிபோல  நான் ஒரு சேர் போட்டு வெளிய உட்கார்ந்திருந்தேன். அதுக்கு நடக்க முடியல. அப்படியே தத்தித் தத்தித் தத்தி என் கால் பக்கத்திலேயும் என் மனைவி கால் பக்கத்திலேயுமா ரெண்டு பேருக்கும் மத்தியில உக்காந்திருக்கு.  அப்ப நான் சொன்னேன். இத உள்ள கொண்டு போடணும். நாம உள்ள போனா இது வந்திரும். அப்படீன்னு சொல்லி நாங்க உள்ள போயிட்டோம். அப்ப அந்தப் பூனை அப்படியே  உள்ள வந்து அதுக்கே உள்ள ஒரு இடத்தில வந்து படுத்துக்கிடக்கு.
வெள்ளிக்கிழமை மத்தியானம்  என் பிள்ளைகள் ஓடி வந்து வாப்பா பூனை துடிச்சிக்கிட்டுக் கெடக்குன்னு சொல்லுறாங்க. என் மனைவி ஓடிப்போயி அதைத் தூக்குறா.  தூக்குன ஒடனே அதனோட ஒரு துடிப்பு. அவ அப்படியே அதக் கீழ வச்சிட்டா. இப்பம் அதோட உயிர் போகக்கூடிய ஒரு நேரம் அதோட ஒரு கால அப்படியே அடிக்குது. நான் இப்பம் அந்தப் பூனையோட தலைய அப்படியே தடவி தண்ணிய எடுத்து ஒரு டிராப் அது வாயில விடுறேன். அப்படியே அந்தப் பூனை இறந்துருது.
இறந்து போன ஒடனே குழந்தைகள்லாம் அழ ஆரம்பிச்சுட்டாங்க. நான் அப்படியே நிக்குறேன். ஒரு அஞ்சு நிமிசத்துக்கு. அப்ப  நான் என்ன பண்ணுனேன்னு கேட்டீங்கன்னா ஒரு அழகான துண்ட எடுத்து ஒரு வாஷிங்  டப் எடுத்து அதக் குளிப்பாட்டி ஒரு அழகான  வெள்ளைத் துணியில அதச் சுத்தி ஒரு குழியத் தோண்டி அதுல போட்டு மண்ணால மூடுனேன். குழந்தைங்க உட்கார்ந்து  அழுதுகிட்டே இருக்காங்க. அப்ப  குழந்தைகள சமாதானப் படுத்துறதுக்காக நான்  ஒரு வார்த்தை சொன்னேன். இந்தப் பூனையினுடைய கடவுளாக வாப்பா இருந்தேன். கடவுளாக இருக்கிறது என்கிற வார்த்தை. எனக்கு அதத் தவிர வேறு ஒன்னும் சொல்லத் தெரியல. இந்தப் பூனையோட  கடவுளாக நான் இருந்தேன்.
ஒரு கவிஞனுடைய மனம்னு சொல்லக்கூடியது.. ஞானம்.. ஞானத்தால் நிரம்பி இருக்கக் கூடியது. கவிதை என்பது வேறு கவிதை மனம் என்பது வேறு. கவிதை மனமுடையவர்களால் கவிதை செய்ய முடியும் ஆனால் எல்லாக் கவிதைக்குள்ளும் கவிதை மனம் இருக்குமா அப்படீன்னு சொல்ல முடியாது.
அப்போ ஏன் வந்து நான் அந்தப் பூனையினுடைய கடவுளாக இருந்தேன். அந்தப் பூனை எந்தப் பிரதி பலனையும் எனக்குச் செய்ய முடியாது. என் குழந்தைக்குச் சாப்பாடு கொடுக்கறேன்னா என் குழந்தை எப்பவாவது ஒருக்க எனக்கு திரும்ப சாப்பாடு போட முடியும். அந்தப் பூனை எந்த வகையிலும் எதையும் திரும்ப  எனக்குச் செய்ய முடியாது. ஒரு மனிதனுடைய காதல் ஒரு மடங்குன்னு சொன்னா கடவுளுடைய காதல் நூறு மடங்குன்னு சொல்லலாம்.  நூறு மடங்குக் காதலோடு அந்தப் பூனையோடு என்னால் நடந்துகொள்ள முடியுது.கவிதைக்கும் கவிதை எழுதுறவருக்குமான உறவு இப்படிப்பட்டது.

நேசத்தின் முகவரி

soo.sivaraman ni 9துள்ளத் துடிக்க உள்ளிழுத்துச் சென்று
அடித்து வீழ்த்தினான் அவனை
நேற்றிரவு
தெரு நிறைந்த கடைநடுவே
கைநீட்டி கேட்டதெல்லாம்
பரிசளித்த அதே கைகளால்தான்.
சொந்தமாய் நிற்கவும் நடக்கவும்
துவங்கிய கால்களின் திடத்தில்
கொஞ்சிக் குழாவி ப்ரியஞ்சொட்ட
கையேந்தி நின்றானவன்.
பெருஞ்சக்கரம் தரைபாவ
சின்னச் சக்கரங்கள் கால்பரப்பி சாய்ந்திருக்கும்
குட்டி சைக்கிளொன்றை கைப்பற்றிக் கொள்ளவென.
சற்றுமுன்..
சைக்கிளை வெளித்தள்ளி
எதிர்ப்பட்ட அப்பனிடமே விசாரித்தான்
போனவாரம் பாட்டியை விட்டுவந்த
‘டவுன் ஃஹோம்’முகவரியை.

சூ.சிவராமன்
(நிகரன், இதழ் 9, பக்கம் 4)

மார்க்சும் அற்பவாதமும்

marx ni 2

அற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும், போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது.
அவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தைத் தீவிரமாக வெறுப்பதற்கு தொடங்கியிருந்தார்.
மார்க்ஸ் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்தார். இந்த  வெறுப்பைப் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.
சுயதிருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில் – தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில் – எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.
தனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறமையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். அவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார்.
(ஹென்ரிஹ் வோல்கவ் எழுதிய ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலிலிருந்து)

(நிகரன், இதழ் 2, பக்கம் 17)